மகளிர் உரிமைத் தொகை.. புதிய பயனாளிகள் பட்டியல் வெளியாகும் தேதி..!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், தகுதியானவர்களுக்கு எந்த தேதி முதல் ரூ.1,000 கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் இல்லம் தேடி அரசு சமுதாயத்தின் கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்குடன், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15, 2025 அன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை 10,000-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகளையும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கி வருகின்றன. இதன் மூலம், மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். அதேநேரம் எப்போது முதல் உரிமை தொகை கிடைக்கும் என்று விண்ணப்பித்தவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். முன்னதாக இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த பயனாளிகள் அறிவிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்திருந்தது.
திட்டம் தொடங்கப்பட்டு வரும் 28ஆம் தேதியுடன் 45 நாட்கள் நிறைவடையும் நிலையில், முதல் வாரத்தில் விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்களுக்கான தகுதி நிலை குறித்த பதில்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அடுத்த சில நாட்களில் முதல் கட்ட பயனாளிகளின் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அண்மையில் திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்தவகையில் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ விரிவாக்கம் நடக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.





