அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்கள் “சசி”க்கு சாதகமாக மாறுமா?
ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, `இந்த விவகாரத்தில் எந்த சர்ச்சைகளும் இல்லை.
அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் கூறிய பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கிறது? கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்றுதான் ஓ.பி.எஸ் சொன்னார். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.
இதனால் பிற நிர்வாகிகளும் எதிர்க்கருத்தை தெரிவித்தனர்’ என்றனர்.இதற்கிடையில், சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சுமார் 200 நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, `எனக்கு வயிற்று வலி இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல்தான் உங்களிடம் பேசுகிறேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் தவறாகப் பேச வேண்டாம். கடும் சொற்கள் ஆறாது என்பதை அனைவரும் உணர வேண்டும்’என்றார்.
அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு இடையே வலுக்கும் கருத்து மோதல் ஒருபுறம் இருந்தாலும் கடந்த 27 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற தினகரனின் மகள் ஜெயஹரினியின் திருமண வரவேற்பில் ஓ.பி.எஸ்ஸின் தம்பி ஓ.ராஜா பங்கேற்றதும் விவாதமானது. மேலும்,பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவுக்காக சசிகலா மதுரை சென்றுள்ளார். அங்கும் தஞ்சாவூரிலும் ஆதரவாளர்களை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழப்பங்கள் தனக்குச் சாதகமாக மாறும் எனவும் அவர் நம்புகிறார்.






