மாணவர்கள் நலன் கருதியே 7.5% இடஒதுக்கீடு அரசாணை: இந்த ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை…! முதல்வர் எடப்பாடி தகவல்!!
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதம் செய்ததால், மாணவர்களின் நலன் கருதியே தமிழக அரசு அரசாணை வெளியிட்டதாகவும், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமத் தேவரின் 113-வது பிறந்த நாள் மற்றும் 58-வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் பசும்பொன்னில செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதித்து வருவதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த அரசாணை வெளியிடப்பட்டது. 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த அரசாணை விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் கோரிக்கை வைக்க வில்லை. யாருடைய கோரிக்கை, வலியுறுத்தல் இன்றியே மாணவர் நலன் கருதி தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.






