யார் அந்த கறுப்பு ஆடு? மதுபான பார் ரெய்டு குறித்து முன்பே கசித்த ஆடியோ..! சீல் நடவடிக்கையில் இருந்து தப்பிய திருப்பூர் பார்கள்..!!
திருப்பூர் மாவட்டத்தில், சட்ட விரோத மதுபான பார்கள் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், இது குறித்து முன் கூட்டியே பார் உரிமையாளர்களுக்கு தகவல் கசிந்ததால், அவர்கள் உஷாராகி, சீல் நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளனர். அரசின் ரெய்டு நடவடிக்கையை பார் உரிமையாளர்களுக்கு கசிய விட்ட கறுப்பாடு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான பாரில், விஷம் கலந்த மது அருந்திய இரண்டு பேர் பலியாகினர். தமிழகத்தையே உலுக்கி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவங்கள், ஆளும் திமுக அரசுக்கு கடும் நெருக்கடியையும் அவப் பெயரையும் தேடித் தந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் இயங்கி வரும் சட்ட விரோத மதுபான பார்கள் குறித்து ரெய்டு நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் சட்ட விரோத மதுபான பார்களை ஒழிக்க, அதிகாரிகள் குழு அதிரடி சோதனைகள் தொடங்கி, மேற்கொண்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், மடத்துக்குளம் உள்பட பல்வேறு இடங்களிலும் டாஸ்மாக் அதிகாரிகள், சட்ட விரோத மதுபான பார்கள் குறித்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், பார்கள் உள்ளன. அவற்றில் 160 பார்கள் உரிமம் பெற்றவை. அதேபோல், 89 மதுபான பார்கள் சட்ட விரோதமாக இயங்குவது, முதல் நாள் சோதனையின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மதுபான பார் சோதனை குறித்து, திருப்பூர் டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் “குற்றம் குற்றமே” தரப்பில் கேட்டோம். அவர் நம்மிடம் கூறுகையில், ” திருப்பூரில் 89 சட்ட விரோத பார்கள் இயங்கி வந்தது உண்மைதான். அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இத்தகைய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை. மேலிட உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆய்வு நடைபெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (24.05.2023) நடைபெற்ற ஆய்வில் 52 மதுபான பார்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் 29 மதுபான பார்கள் ஏற்கனவே மூடப்பட்டவை. இன்று எங்களின் ஆய்வில் 23 சட்ட விரோத மதுபான பார்களுக்கு சீல் வைக்கப்பட்டன” என்றார்.
தனியார் ரெஸ்டாரண்டுகளில் செயல்படும் மதுபான விடுதிகளில் மதுபான சப்ளை நடைபெறுகிறதே. அங்கும் விதிமீறல் புகார்கள் உள்ளன. அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று “குற்றம் குற்றமே” தரப்பில் கேட்டக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டாஸ்மாக் மேலாளர், “உணவு விடுதிகளுடன் இணைந்த மதுபான பார்களை பொருத்தமட்டில், FL2 பார்கள் 32, FL3 பார்கள் 19 உள்ளன. தனியார் உணவு விடுதியுடன் கூடிய பாரில் மதுபான சப்ளை குறித்து கலால் துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
எனினும், அதிகாரிகளின் ஆய்வு வெறும் கண் துடைப்பாக இருக்குமோ என்ற சந்தேகமே வலுத்துள்ளது. காரணம், சென்னையில் இருந்து அதிகாரிகள் குழு பல்வேறு திருப்பூர் மாவட்டத்தில் ரெய்டுக்கு வருவது குறித்து, முன் கூட்டியே ஒரு கறுப்பாடு மூலம் இங்குள்ள மதுபான பார் உரிமையாளர்களுக்கு தகவல் கிடைத்துவிட்டது. சட்ட விரோத மதுபான பார்களை உடனே மூடிவிடுங்கள் என்று, டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகி பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிகாரிகளின் இந்த ரெய்டு குறித்த தகவல் முன்கூட்டியே கசிந்த காரணத்தால், சட்டவிரோத பார்கள் அனைத்தும் ரெய்டுக்கு முன்பே மூடிவிட்டனர். இதன் மூலம் அதிகாரிகளின் சீல் நடவடிக்கையில் இருந்து சட்டவிரோத பார்கள் தப்பிவிட்டன. அதே நேரம் நிலைமை சரியானதும், அவை எந்த நேரத்திலும் தங்களது தொழிலுக்கு மீண்டும் திரும்பிவிட முடியும் என்பதே உண்மை.

எனவே, மதுபான விவகாரத்தில் அதிகாரிகளின் தற்போதைய நடவடிக்கை வெறும் கண்துடைப்பு போலவே தெரிகிறது. கள்ளச்சாராய சாவுகளை கண்ட பின்னரும், மனசாட்சியில்லாத கறுப்பாடுகள், டாஸ்மாக் விஷயத்தில் மக்களின் உயிர்களை விட பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுவது வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துளியும் கருணை காட்டாது கண்டிப்புடன் செயல்பட்டு, தனது உறுதிப்பாட்டை காட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
“பாரை மூடுங்க… ரெய்டு வர்றாங்க! “
ஆடியோவில் என்ன இருக்கு?
திருப்பூரில் உள்ள சட்ட விரோத மதுபான பார்களை ரெய்டு நடத்த அதிகாரிகள் வரும் தகவல், முன் கூட்டியே கசிந்ததால், இங்குள்ள சட்ட விரோத பார்கள் சுதாரித்துக் கொண்டு தாங்களாகவே மூடிக் கொண்டு, அரசின் நடவடிக்கையில் இருந்து தப்பிவிட்டன.
இதற்கு முக்கிய காரணம், டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், பார் உரிமையாளர்களுக்கு அனுப்பிய ஆடியோ செய்திதான். அந்த ஆடியோவில், இரவு நேரங்களில் யாரும் மதுபானம் விற்க வேண்டாம் என்று, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடியோவில்… ” மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும்… நாளைக்கு சென்னையில் இருந்து எஸ்.ஆர்.எம். தலைமையில் ஒரு டீம் வர்றாங்க. அவுங்க illegal பார் நடக்குதான்னு பார்க்க வர்றாங்க. illegalபார் இருந்த உடனே மூடிவிடுங்க. நைட் யாருக்கும் சரக்கு கொடுக்காதிங்க. வந்தா, தஞ்சாவூர்ல எப்படி கேஸ் போட்டாங்களோ, அப்படி இங்கையும் கேஸ் போட சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்க. அதனால, நீங்க கொஞ்சம் கவனமா இருங்க. நைட் ஓட்டறதுக்கு சரக்கு கொடுக்காதிங்க. 10 டூ 12 மணிக்கு பார் குளோஸ்ல தான் இருக்கணும். இதை இமிடியட்டா உங்க சைடில் இருக்கிற டாஸ்மாக் கடைகளுக்கு சொல்லீடுங்க. வந்து பிடிச்சாங்கன்னா நம்ம மேல நடவடிக்கை எடுப்பாக, நம்ம மேல எஃப்.ஐ.ஆர் போடுவாங்க… நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோத மதுபான விற்பனைக்கு துணை நிற்கும் இந்த ஆடியோவில் பேசியிருப்பது யார் என்று தெரியாத நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






