விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை எப்போது?
விடுபட்ட மகளிருக்கு ஓரிரு மாதங்களில் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை கொடுக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அப்போது “நானும் காதல் திருமணம் தான்” என்று குறிப்பிட்டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், மேடையில் இருந்த காதல் திருமணம் செய்து கொண்டவர்களைப் பாராட்டினார். இந்து சமய அறநிலையத்துறையால் நடத்தப்படும் இந்தத் திருமண விழா, “அறநிலையத்துறையா அல்லது அன்புத் துறையா” என்று கேட்கும் அளவுக்குச் சிறப்பாக இருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். மேலும், திருமணம் செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவதாக உதயநிதி குறிப்பிட்டார். அதில் சிலவற்றை பட்டியலிட்டுப் பேசினார்.
₹1,000 மாதந்தோறும் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.
விடுபட்டவர்களுக்கும் விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்.
மகளிர் விடியல் பயணத்தில் ₹780 கோடி மதிப்பிலான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
22 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தின் வெற்றி, பஞ்சாப் முதலமைச்சரையும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தூண்டியுள்ளது”என்றார்.
“அறநிலையத்துறை பணத்தை எடுத்து எப்படித் திருமணம் நடத்தலாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோபித்துக்கொள்ளப் போகிறார் என்று கிண்டல் செய்த உதயநிதி, அறநிலையத்துறை பணத்தை கல்விக்கும், மற்ற சமூகத் தேவைகளுக்கும் செலவு செய்யலாம் என்று நீதிமன்றமே அனுமதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், “அறநிலையத்துறை நிதியை கல்விக்குச் செலவு செய்யக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். இப்படியான மனநிலையில்தான் இன்றைக்கு எதிர்க்கட்சி செயல்படுகிறது” என்று அவர் விமர்சித்தார்.
திமுக அரசின் திட்டங்கள் குறித்து மேலும் பேசிய அவர், “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்களில் 40% மனுக்கள் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் தான் என்றும், இது போன்ற பல திட்டங்களால்தான் தமிழ்நாடு 11.1 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவின் தலைசிறந்த முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.
மணமக்களுக்கு அறிவுரை கூறிய உதயநிதி, “ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழுங்கள். சுயமரியாதையோடு வாழுங்கள். உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் சேகர்பாபு வெள்ளி வேல் பரிசாக வழங்கினார்.






