Code word-க்கு என்ன அர்த்தம்? கிருஷ்ணாவிடம் காவல்துறை விசாரணை..!
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பார் ஒன்றில் நடந்த அடிதடி தகராறில் அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிரதீப் என்பவர் தனக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாகவும், அவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள்களை வழங்கி வந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.இதன் நீட்சியாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு படத்தின் நடிகரும், இயக்குநர் விஷ்ணு வர்தனின் சகோதரருமான கிருஷ்ணாவை காவல்துறை தேடிவந்தது. 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்த நிலையில், கிருஷ்ணா காவல்துறையில் நேரில் ஆஜரானார்.
அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர் தனக்கு இரைப்பை பிரச்சினை மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும் அப்படியிருக்கும்போது எப்படி போதைப்பொருள் பயன்படுத்த முடியும் என்றும் காவல்துறையிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மறுபுறம் கிருஷ்ணாவின் பெசன்ட் நகர் வீட்டில் 2 மணி நேரம் காவல்துறை சோதனை நடத்தினர்.
அவர் பயன்படுத்திய மருந்துகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் அழிக்கப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களை திரும்ப எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் நண்பர்களுடன் Cord word-ல் பேசியதாக கூறப்படுகிறது.
Code Word-க்கு அர்த்தம் என்ன என காவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






