--- --:--:-- --

`விடியல்’ ஆட்சியில் விதிமீறல்..! பண்டகசாலை பணி நியமனத்தில் தனி ராஜ்ஜியம்.. புதுகை கூட்டுறவுத்துறை செயல்பாடுகளோ பூஜ்ஜியம்!

kkweb_page-0001 (2)

* புதுகை பண்டகசாலை பணி நியமனத்தில் பகீர் மோசடி…
* குமுறும் ஊழியர்களுக்காக களமிறங்குமா கூட்டுறவுத்துறை?

 

புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், மாநில கூட்டுறவு பதிவாளர் மற்றும் கூட்டுறவுத்துறைச் செயலாளரை ஏமாற்றி, சான்றிதழ் மோசடி செய்து, பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்ட MM16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், பணியாளர்கள் போதிய கல்வித்தகுதியின்றி நியமனம் செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக, ஊழியர்கள் தரப்பில் பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் வெளிவரவே, தகவல் அறியும் உரிமைச்ச்சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம், சமூக ஆர்வலர் தரப்பில் இது தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

 

அதன்படி, புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை  பண்டகசாலையில் எத்தனைப் பணியாளர்கள் தேவை? அவர்களின் கல்வித்தகுதி என்னென்ன? எத்தனைப் பதவிகள் தேவை? போதிய பணியாளர் உள்ளனரா? தகுதியில்லாத பணியாளர்கள் யாரும் பணியில் உள்ளனரா? ரேஷன் பணியாளர்கள் யாரேனும் அலுவலகத்தில் பணி செய்கிறார்களா? அவர்களுக்கு தற்காலிகமாக பணி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படியானால் அவர்கள் ரேஷன்கடை விற்பனையாளர் சம்பளத்தில் அலுவலகப் பணியை செய்கிறாரா? அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து அரசு நிர்ணயம் செய்துள்ள சம்பளம் கொடுக்கப்படுகிறதா?  1. மேனேஜர், 2. காசாளர், 3. எழுத்தர் , அலுவலக பணியாளர்களின் தற்போதைய நிலை என்ன? அப்படி விற்பனையாளர்கள் அலுவலகத்தில் பணி செய்தால், அவர்கள் செய்து வந்த ரேஷன்கடை விற்பனையாளர் பணியை யார் பார்த்து வருகிறார்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டன. எனினும், இவற்றுக்கு இதுவரை பதில் வரவில்லை.

பொதுவாக கூட்டுறவு சங்கங்களில் பதவி உயர்வு என்பது தகுதி, பணிமூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில்,  நீண்டகாலமாக தனி ராஜ்ஜியம் நடத்தி வரும் மேலாளர் கிருஷ்ணகுமார், நிர்வாக இயக்குனர் கலந்தர் நைனா முகமது ஆகியோரின் செயல்பாடுகளோ வேறுமாதிரியாக உள்ளன.

 

“கூட்டுறவுத்துறை  சட்டம் எங்களுக்கெல்லாம் பொருந்தாது; எங்களுக்கு அமைச்சர் வேறு, கூட்டுறவுத்துறை செயலாளர் வேறு, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் – சரக துணைப்பதிவாளர் வேறு. மாநில பதிவாளர் சுற்றறிக்கை எங்களுக்கு பொருந்தாது. பணம் இருந்தால் கொண்டு வாங்க. பதவி உயர்வு இல்லையென்று சொல்லிவிட்டால் பிறகு நீதிமன்றமே சொன்னாலும் எதுவும் நடக்காது” என்று மேனேஜர் மற்றும் நிர்வாக இயக்குனர் இருவரும் கொக்கரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது கிமினல் வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உண்மையில், புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையானது, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று  அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது குறித்து நமது `குற்றம் குற்றமே’ வார இதழ் தரப்பிடம், கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

 

புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் மேலாளர், உரிய கல்வித்தகுதி இல்லாத, சீனியாரிட்டி இல்லாதவர்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பணியமர்த்தி உள்ளார். இந்த நியமனங்கள் குறித்தோ, இங்கு நடப்பவை குறித்தோ, கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகளுக்கு மேனேஜர் தெரியப்படுத்துவதும் இல்லை. இதனால் உரிய தகுதி, சீனியாரிட்டி உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மேனேஜர் கிருஷ்ணகுமார்
மேனேஜர் கிருஷ்ணகுமார்

 

பணியாளர்களின்  உரிமையை நிலைநாட்ட, நேர்மையானவர் என்று பெயர் எடுத்த கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், சரக துணைப்பதிவாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர், இந்த விவகாரத்தில் தனிகவனம் செலுத்த வேண்டும். உடனடியாக, பணியாளர் நியமனம் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அத்துடன், மாநில பதிவாளரின் சுற்றறிக்கைப்படி பதவி உயர்வு கிடைக்குமா என்று காத்திருக்கும் பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தாமதமின்றி பதவி உயர்வு வழங்கி, எங்களைப் போன்ற பணியாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்“ என்று வேதனையோடு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், பணி நியமனங்கள் உள்ளிட்டவற்றிலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம், சில இடங்களில் அதிகாரிகள் அத்துமீறுவது, அதிகார மமதையில் ஆட்டம் போடுவது போன்றவை, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.

 

எனவே, இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட MM 16 நுகர்வோர் கூட்டுறவு மொத்த  பண்டகசாலை நிர்வாக இயக்குனர் மற்றும் மேலாளர் ஆகியோர் புரிந்த விதிமீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும். அவர்கள் மீதான முறைகேடு புகார் குறித்து வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து விசாரித்து தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். தகுதியற்ற நபர்களை பணியமர்த்திய அதிகாரிகள், துணைபோனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள், கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளாகும்.


யார் இந்த நைனா முகமது?

 

கூட்டுறவு பண்டக சாலையின் நிர்வாக இயக்குனராக இருக்கும் நைனா முகமது என்ற கலந்தர் நைனா முகமதுவின் சொந்த ஊர் மீமிசல். இவருக்கு இரண்டு மனைவிகள் என்றும் சொல்லப்படுகிறது. திருச்சி பீமா நகர், அரியலூர் ஹவுசிங், பின்னர் பெரம்பலூரில் ஹோல்சல் ஸ்டோர் வைத்திருந்ததை ஆய்வு என்ற பேயரில் மூடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பணி செய்த இடங்களில் அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் இருந்ததாகவும், 17b குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளதாகவும், ஒரு கட்டத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் என்றும், அவரை பற்றிய அதிர்ச்சித் தகவல்களை நெருக்கமானவர்கள் முன்வைக்கின்றனர்.

 

மேலும் இந்த விதிமீறல்கள் குறித்த கூடுதல் விபரங்களுடன் வரும் “குற்றம் குற்றமே” இதழில் தோலுரித்து தொங்கவிடும்…

Right Menu Icon