நீயா- நானா யுத்தம்! கேபிள் இணைப்பு வழங்குவதில் திமுகவினரிடையே முட்டல்.. போலீஸ், கோர்ட் வரை சென்றும் திருப்பூரில் நீடிக்கும் சிக்கல்
திருப்பூரில், கேபிள் டிவி இணைப்பு வழங்குவதில் திமுக பிரமுகர்கள் இடையே ஏற்பட்ட நீயா நானா மோதல், தற்போது கொலை மிரட்டல், கேபிள் இணைப்புகளை துண்டித்தல் என்று நீண்டு கொண்டே செல்கிறது. போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என்று சென்ற இந்த விவகாரத்தில் மக்கள் நலனை பாதிக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தாலே கேபிள் நிறுவனங்கள் விவகாரத்தில் குறுக்கிடும்; அவர்களின் மடியில் கை வைக்கும் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதுண்டு. தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர் உள்ள நிலையில், கேபிள் விவகாரத்தில் அரசில் குறுக்கீடுகள் என்பது, கடைசியில் வாடிக்கையாளர்களையே கடுமையாக பாதிக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் சரிவர இல்லை என்றும், சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தன. தமிழகத்தில் அவ்வப்போது கேபிள் சேனல்களை சரிவர பார்க்க முடியாத நிலை இருப்பதாகவும், செட் ஆப் பாக்ஸ் உள்ளிட்ட விவகாரங்களில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் பிரச்சனைகளை அரசு காதுகொடுத்து கேட்கவில்லை என்றெல்லாம் அதிருப்தி குரல்கள் ஒலிக்கின்றன.
இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆங்காங்கே சில திமுக நிர்வாகிகள், கேபிள் டிவி ஒளிபரப்பு விவகாரங்களில் குறுக்கிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தர்ம சங்கடமான நிலையை உண்டாக்கி வருகின்றனர். இதற்கு திருப்பூரும் விதிவிலக்கல்ல. இங்குள்ள ஆளும் திமுக பிரமுகர்கள் ஒருசிலரின் செயலால், ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
திருப்பூர், கே செட்டிபாளையம் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக உள்ளவர் சாமிநாதன். இவர், தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர் சங்க கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து, செட்டிபாளையம் பகுதியில் கேபிள் இணைப்புகளை சாமிநாதன் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தான் திமுகவினர் சிலர் அவருக்கு குடைச்சல் தரத் தொடங்கியுள்ளனர். சாமிநாதன், செட்டிபாளையம் வஞ்சி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில், சுமார் 250க்கும் மேற்பட்ட இணைப்புகளை கடந்த சில மாதங்களாக வழங்கி இருக்கிறார்.
ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த திமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ரத்தினசாமி, ராமு என்கிற ராமசாமி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பில், சாமிநாதன் வழங்கிய கேபிள் இணைப்புகளை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள், அத்துமீறி குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் நுழைந்து கேபிள்களை துண்டித்ததாகவும், இதை தட்டிக்கேட்ட கேபிள் ஆபரேடர் சாமிநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்து அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் சாமிநாதன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், போலீஸ் வரை சென்றுள்ளது. கேபிள் இணைப்பை துண்டித்தது, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையாளரிடம் சாமிநாதன் புகார் மனுவை அளித்திருக்கிறார். எனினும், கடந்த இரண்டு நாட்களாக இது குறித்து எந்த நடவடிக்கையும் போலீஸ் தரப்பில் எடுக்கப்படவில்லை. இது கேபிள் ஆபரேட்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்வி அவர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த சூழ்நிலையில், தமிழக கேபிள் ஆப்ரேட்டர் அசோசியேஷன் நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில், திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஏப்ரல் 21ம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கேபிள் இணைப்புகளை துண்டித்த திமுகவின் பகுதி செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோரிக்கை மனுவை வழங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
கேபிள்டிவி ஆபரேட்டர்களுடன் செட்டிபாளையம் பகுதி திமுக பிரமுகர்கள் கோவிந்தராஜ் மற்றும் ரத்தினசாமி, ராமு ஆகியோர் மல்லுக்கட்டி குஸ்தியில் ஈடுபட்டுள்ள விவகாரம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களின் மோதலில், கேபிள் டிவி வாடிக்கையாளர்களின் நலன் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யுமா?

கேபிள் இணைப்பை நாங்க துண்டிக்கல…
திமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜ் விளக்கம்!
அப்பார்ட்மெண்ட் பகுதிக்கு கேபிள் இணைப்பு வழங்க, நாங்கள் மூவரும் முயற்சி செய்தோம். இதில், எனக்கும் ரத்தினசாமிக்கும் அனுமதி கிடைத்தது. இதில் காலதாமதமான சூழலைப் பயன்படுத்தி, செட்டிபாளையத்தில் கேபிள் நடத்தி வரும் திமுக பிரமுகரான சாமிநாதன், இப்பகுதி கேபிள் டிவிக்காரருடன் கூட்டு சேர்ந்து, இங்கு கேபிள் இணைப்பு வழங்கியுள்ளார்.
கேபிள் இணைப்பு வழங்க எங்களுக்கு அனுமதி கிடைத்த நிலையில், ஒரு இணைப்புக்கு ரூ. 20 வீதம் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம், அட்வான்ஸ் இரண்டு லட்சம் என அரசுக்கு நாங்கள் ரூ. 5 லட்சம் கட்டியுள்ளோம். இதையெதிர்த்து அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தை சென்றார்கள். இதில், அரசு அனுமதி பெற்றவர்களே குடிசை மாற்று வாரியக்குடியிருப்பில் கேபிள் இணைப்பு தர வேண்டுமென்று எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. சாமிநாதன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் பின்னர், 2 – 3 மாதங்கள் சென்ற நிலையில், திமுக பிரமுகர் என்பதால் சாமிநாதனை போய்ச் சந்தித்து, செட்டிபாளையம் பகுதியில் கேபிள் இணைப்பு தரும் பணியில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும்படி கேட்டோம். இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவழித்ததாக சாமிநாதன் கூறி, விலக மறுத்தார். பேச்சு வார்த்தைக்கு பின்னர், அட்வான்ஸாக பெறப்பட்ட தொகையுடன் அவருக்கு ரூ. 2 லட்சம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, எங்களுக்கு ஒப்புதல் தந்துவிட்டு குடிசை மாற்றுவாரிய கேபிள் இணைப்புகளையும் தர மறுப்பது குறித்து குடிசை மாற்று வாரியத்திடம் போய் முறையிட்டோம். இதன்பேரில், மேற்படி வீடுகளுக்கு கேபிள் இணைப்பு தரும் பணியில் இருந்து சாமிநாதன் விலகிக் கொள்ள வேண்டும் என்று குடிசை மாற்று வாரியம் தரப்பில் இருந்து நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால், அதை சாமிநாதன் இதை பெற மறுத்து, திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து குடிசை மாற்று வாரியத்தின் கோவை அதிகாரிகள் நேரில் வந்து, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தான், குடிசை மாற்று வாரியத்தில் கொடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகளை துண்டித்தனர். மற்றபடி நாங்கள் கேபிள் இணைப்பை துண்டித்ததாக் கூறுவது முற்றிலும் தவறு. நீதிமன்ற உத்தரவு, அரசு தந்த அனுமதியின் பேரில்தான் நாங்கள் கேபிள் இணைப்பை வழங்க முன்வந்தோம். இது தொடர்பாக எல்லா ஆவணங்கள், ரசீது உள்ளிட்டவற்றை காவல் நிலையத்தில் அளித்துள்ளோம். நீதிமன்றத்தை அணுகும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






