விநாயகர் சதுர்த்தி – பிள்ளையார்பட்டியில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள்
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விழாவுக்கான பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி நாடே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில்கள், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் விழாவுக்கான விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கிச் சென்றனர். சென்னை கோயம்பேட்டில் விநாயகர் சதுர்த்திக்கான பொருட்களின் விற்பனை களைகட்டியது.
பூஜையின்போது படைப்பதற்காக பல வகையான பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்கிச் சென்றனர். சிலைகளுக்கு வைப்பதற்கான பல வண்ணங்களில் அமைந்த குடைகள், எருக்கம்பூ மாலைகளையும் வாங்கிச் சென்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விற்பனை ஜோராக நடைபெற்றது. திருவிழாக்காலம் என்ற காரணத்தால் பூக்களின் விலை பலமடங்கு அதிகரித்துக் காணப்பட்டது.
கோவையில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரமாண்டமான சிலைகளை வாங்கியவர்கள், அவற்றை வாகனங்களில் வைத்து ஏற்றிச் சென்றனர். அதேபோல வீடுகளில் வைத்து வழிபட சிறிய அளவிலான சிலைகளையும் மக்கள் வாங்கிச் சென்றனர். நெல்லை பாளையங்கோட்டை சந்தையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பூஜை பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர். பொரி, கடலை, மாவிலை தோரணங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். விழாவையொட்டி இங்கும் பூக்களின் விலை கடுமையாக அதிகரித்துக் காணப்பட்டது. இதனிடையே, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் சதுர்த்தி விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பெரிய தேரில் உற்சவரான ஸ்ரீகற்பக விநாயகரும், அதனைத் தொடர்ந்து வந்த சிறிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் மின்னொளியால் ஜொலிக்கிறது. கோயில் தெப்பக்குளம், அர்ஜூனன் தோட்டம் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், கோவை புலியகுளம் முந்தி விநாயகருக்கு சுமார் 4 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆஜானுபாகுவாக காட்சியளித்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடந்த நிலையில், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்த அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தங்க அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்த நிலையில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.





