இன்று 2 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு குஜராத் – கொங்கன்- கோவா – கர்நாடகா – கேரளா கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





