--- --:--:-- --

அணுகுண்டை கையில் எடுத்த விஜய்…! ஆட்சியில் பங்கு முழக்கத்தால் அலரும் பிரதான கட்சிகள்..விஜயின் அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ள அரசியல் களம்!

2

திர்பார்த்தது போலவே, தனது முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் விஜய். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற அணுகுண்டை அவர் கையில் எடுத்திருப்பது, திமுக- அதிமுகவுக்கு நிச்சயம் பெரிய நெருக்கடியை தந்துள்ளது. இளைஞர்களின் வாக்கை நம்பியுள்ள பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் விஜய் வரவால் தூக்கத்தை தொலைத்துள்ளன.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு அக். 27ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 

மாநாட்டிற்கு காசு கொடுத்து ஆட்கள் அழைத்து வரப்படவில்லை; தன்னெழுச்சியால் அதிகாலை முதலே மாநாட்டிற்கு தவெக தொண்டர்கள் வரத் தொடங்கினர். மாலை 4 மணிக்கு தான் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் காலை, மதிய உணவுகள் மாநாட்டு பந்தல் வளாகத்தில் வழங்கப்படவில்லை.

 

இதனால், காலையில் வந்து காத்திருந்தவர்கள் உணவு, தண்ணீரின்றி திறந்தவெளி வெளியில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து சோர்ந்து போயிருந்தனர். நேரம் செல்லச்செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே விக்கிரவண்டியே திணறியது. முண்டியடித்து ஓடும் தொண்டர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறிப் போனார்கள். வாகனங்களால் நெடுஞ்சாலைகளில் பல கி. மீ. தூரத்திற்கு போக்குவரத்து முடங்கியது.

 

இந்த களேபரங்களுக்கு மத்தியில் மாநாட்டு திடலுக்கு வெளியே பல ஆயிரம் பேர் காத்திருக்க, மாநாட்டை ஒரு மணி நேரம் முன்னதாகவே 3 மணிக்கு தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின.  மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. 4 மணி அளவில் மேடைக்கு வந்த விஜய், தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

 

கூட்டத்தின் மையத்தில் 800 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த ‘ரேம்ப்பில் நடந்து சென்றார். தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டை அணிந்து கொண்டார். பின்னர், மேடையின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், பெரியார், திருப்பூர் குமரன், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வேலு நாச்சியார், தியாகி அஞ்சலை அம்மாளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

ராகுகாலம் தொடங்குவதற்கு முன்பாக, மாலை 4.24 மணிக்கு ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற கட்சியின் பாடல் ஒலிக்க, 100 அடி உயர கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சிக் கொடியை விஜய் ஏற்றிவைத்தார். அதை தொடர்ந்து, தனது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா இருவரிடமும் ஆசி பெற்றுக் கொண்டு விஜய் தனது முதலாவது கன்னிப்பேச்சை தொடங்கினார்.

 

விஜய் பேசியதாவது: நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால், அவர் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே நம் கொள்கை. அடுத்து, நேர்மையான நிர்வாகம் தந்த காமராஜர், அரசியல் சாசனம் உருவாக்கிய அம்பேத்கர், வீரமிக்க பெண்களான வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள். இவர்கள் எல்லாம்தான் நம் கொள்கை தலைவர்கள்.

 

பிரிவினைவாதம் பேசுபவர்கள் நம் கொள்கை எதிரிகள். ஊழல் புரிவோர் நமது அரசியல் எதிரி. ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும் கபடதாரிகள்தான் இப்போது ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.

 

மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள்.

 

இனி என்னை ‘கூத்தாடி கூத்தாடி’ என்று கூப்பாடு போடுவார்கள். எம்ஜிஆர், என்டிஆரை அப்படி கூப்பிட்டவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்றைக்கும் அந்த தலைவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என் சினிமா உச்சத்தை உதறிவிட்டு வந்துள்ளேன்.

 

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் நம்மை தனிப்பெரும்பான்மையோடு மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். மக்கள் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும்.

நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.

 

முன்னதாக, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் தாகிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

ஆட்சியில் பங்க்கு வேண்டும் என்று விசிக போன்ற கட்சிகள் திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், அதிகாரதிலும் ஆட்சியிலும் பங்கு என்று விஜய் அறிவித்திருப்பது, விசிகவுக்கான சிக்னல் என்று கருதப்படுகிறது. இதனால், திமுக கூட்டணிக்கு கடும் நெருக்கடி இனி ஏற்படும். விஜய் கையில் எடுத்துள்ள இந்த அணுகுண்டு, வரும் தேர்தல் கூட்டணியை மாற்றக்கூடியதாக இருக்கும் என்று கருதப்படுகிரது.

 

அதேபோல், எதிரிகள் என்று வெளிப்படையாக பாஜக, திமுகவை அறிவித்த விஜய், அதிமுக பற்றி எதையும் குறிப்பிடவில்லை. மாறாக எம்ஜியார் பற்றி பேசி, அப்ளாஸ் வாங்கினார். இளைஞர்கள் வாக்குகளை நம்பியுள்ள பாஜக, நாம் தமிழர் கட்சிகள் விஜய் நடத்திய பிரம்மாண்ட மாநாட்டை பார்த்து திகைத்து போய், கவலையில் ஆழ்ந்துள்ளன.

 

அரசியல் களத்திற்கு விஜய் புதியவர் என்ற போதும், அவர் ஆடித்து ஆடி தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி பலர் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் என்பதே உண்மை. மாநாட்டு ஏற்பாடுகளில் ஒருசில குறைபாடுகள் இருந்த போதும் மாஸ் காட்டி தனக்கு உள்ள செல்வாக்கை விஜய் நிரூபித்துள்ளார்.

விஜயின் இந்த வேகமும் சுறுசுறுப்பும் ஆக்ரோஷமும் அடுத்து வரும் நாட்களில் தொடருமா? இதே வேகத்தில் அடித்து ஆடுவாரா? அல்லது எல்லாம் ஒருநாள் மாநாட்டுடன் போயிடுமா? இதே வேகம் தொடர்ந்தால் வரும் தேர்தலில் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக விஜய் மாறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

விஜயின் சரவெடி பேச்சு…
தலைவர் ரியாக்ஷன் என்ன?

 

தவெக மாநாட்டில் விஜய் சொன்ன முக்கிய அணுகுண்டு, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதாகும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

 

இயக்குநர் பா.ரஞ்சித்:

 

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக விஜய் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி.

 

சீமான்:

 

திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கண் என்று அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பதுபோல் இருக்கிறது விஜய் இரண்டையும் சேர்த்துப் பேசியிருப்பது. எனவே எங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்றாக இல்லை. மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி:

 

விஜய் பாஜகவின் ‘ஏ டீமும்’ இல்லை, ‘பி டீமும்’ இல்லை. அவர் பாஜகவின் ‘சி டீம்’. தமிழக வெற்றிக் கழக மாநாடு ஒரு பிரம்மாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் அந்தக்கட்சி பற்றி விஜய் பேசவில்லை. பாஜகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக திமுக உள்ளது.

Right Menu Icon