இன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!
கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை வரையிலும், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதேபோன்று, கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கன முதல் மிகக் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நகரின் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்ட ஆட்சியர்களுக்குப் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதிக கனமழையை எதிர்கொள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பயன்படுத்தி, மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.





