--- --:--:-- --

மேட்டூர் அணையிலிருந்து இன்று நீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

3

பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, அந்த ஆண்டு முதல் முறையாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

 

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு 230 நாட்கள் 330 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தால் இந்த அளவு மாறுபடும்.
இதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

அதேநேரத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேலாக இருந்தால் மட்டுமே அன்றைய தினம் நீர் திறக்கப்படும். அந்த வகையில் உரிய தேதியில் 19 முறையும், முன் கூட்டியே 11 முறையும், காலதாமதமாக 61 முறையும் திறக்கப்பட்டுள்ளது.2011 முதல் 2019 வரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் காலதாமதமாக திறக்கப்பட்டு வந்த நிலையில், 2020, 2021 ஆம் ஆண்டுகளில் உரிய தேதியில் திறக்கப்பட்டது.

 

2022 ஆம் ஆண்டு மே 24 இல் முன்கூட்டியே திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 117.76 அடியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உரிய தேதியில் திறக்கப்பட்டாலும், கர்நாடகா போதிய அளவு நீரை திறக்காததால், முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.97 அடியாக இருந்ததால், டெல்டா பாசனத்திற்காக உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர் தண்ணீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக 110 அடியாக உயர்ந்தபின், ஜூலை 28-ம் தேதி காலதாமதமாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இந்த நிலையில், தற்போது, 114 அடி நீர்மட்டம் இருப்பதால், ஜூன் 12 ஆம் தேதியான இன்று நீர் திறக்கப்படுகிறது.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து நீரைத் திறந்து வைக்கிறார்.இன்று திறக்கப்படும் நீரின் மூலம் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் அக்டோபர் மாதம் 23-ம் தேதி முதல் நேற்று வரை 232 நாட்களாக 100 அடியாக நீடித்து வருகிறது.

Right Menu Icon