வேலூர் காவல் பயிற்சிப் பள்ளிக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின்
வீரமங்கை வேலுநாச்சியாரின் புகழைப் போற்றும் விதமாக, வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவது தலையாய கடமை” சமூக வலைத்தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதை நமது திராவிட மாடல் அரசு தலையாய கடமையாகக் கருதுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு பொறுப்பேற்றது முதல், வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம், 2023 குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலை என அவரது புகழைப் பாடி வருவதாக அவர் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி – ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சிலை திறப்பு விழாவில், வேலுநாச்சியாருக்கு மேலும் ஒரு பெருமை சேர்க்கும் வகையில், வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்றும் முதலமைச்சர் பெருமிதத்துடன் அறிவித்தார்.
“மண் – மானம் காக்கப் புயலெனப் புறப்பட்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும், அவருக்குத் துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட தீரமிக்க தமிழர்களின் வரலாறும், இந்த மண் யாருக்கும் தலைகுனியாது எனும் வரலாற்றை உரக்கச் சொல்லும்” என்று முதலமைச்சர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






