த.வெ.க. தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு சோதனை.!
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள விஜய், த.வெ.க. கட்சியை ஆரம்பித்து அதற்காகத் தீவிரமாகத் தயாராகி வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கும் அவர், முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை திருச்சி, அரியலூர் பகுதிகளில் பரப்புரை செய்தார்.
அடுத்தகட்டமாக நாளை நாகப்பட்டினம் பகுதிகளில் பரப்புரை செய்யவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வரும் நிலையில், விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்குள் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் புகுந்த நிலையில், வெடிகுண்டு ஏதேனும் வைத்துள்ளாரா என்ற கோணத்தில் சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சோதனை செய்ய வருகை தந்துள்ளனர்.
அண்மையில் விஜய் வீட்டிற்குள் புகுந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இரவு நேரத்தில் அந்த நபர் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அருண் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. பின் வாசல் வழியாக விஜய் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த அருண் என்ற அந்த நபர், விஜய் மகன் ஆடையை போட்டு பார்த்து அழகு பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, விஜய்க்கு பாதுகாப்பு அளித்து வரும் ஒய் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளின் தகவலின் பேரில் விஜய் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததோடு வீட்டில் சோதனை செய்ய வலியுறுத்தை அடுத்து தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.






