--- --:--:-- --

நண்பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறி, பலசரக்கு மளிகை கடைகள் இயங்க அனுமதி..! வரும் 6 ஆம் தேதி முதல் அமல்..!

1

கொரொனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியாக செயல்படுகின்ற காய்கறி, பலசரக்கு மளிகை கடைகள், குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வகை கடைகளிலும் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மளிகை, காய்கறி பலசரக்கு கடைகளைத் தவிர பிற வகை கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் மருந்தகங்கள் ,பால் வினியோகம் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளும் நண பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

உள்ளரங்கு மற்றும் திறந்த வெளியில் சமூக அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பயணிகள் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், வாடகை டாக்சி ஆகியவற்றில் 50% இருக்கைகளுக்கு மேல் நிரப்ப அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளவும் அரசு அனுமதித்துள்ளது.

 

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளை தொடர்ந்து ஊரக பகுதிகளிலும் அழகு நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரவு நேர ஊரடங்கு ஞாயிறு பொது முடக்கம் போன்ற அறிவிப்புகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

முதல்வராக பதவியேற்க உள்ள முக ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon