முறைகேடு புகார் : தமிழக அரசின் ரூ.1950 கோடி மதிப்பிலான ‘பாரத் நெட்’ டெண்டர் ரத்து..மத்திய அரசின் அதிரடியால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு சிக்கல்!!
தமிழக அரசு சார்பில் ரூ.1950 கோடிக்கு விடப்பட்ட பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டரில் முறைகேடுகள் ஒடைபெற்றதாக எழுந்த தொடர் புகார்களை தொடர்ந்து டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு தர்ம சங்கடம் எழுந்துள்ள நிலையில் தகவல் தொழில் றுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை அளிப்பதற்காக பாரத் நெட் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12524 கிராமங்களுக்கு அதி நவீன தரத்தில் இணைய தள சேவை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்க ரூ.1950 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு டெண்டர் விட்டது.
இந்த டெண்டர் விவகாரத்தில் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் முறைகேடு செய்துள்ளதாக திமுக தரப்பில் புகார் வாசிக்கப்பட்டது. அறப்போர் இயக்கம் சார்பிலும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு பெரும் சர்ச்சை எழுந்தது.

ஆனால் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரோ டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை சாதித்ததுடன், புகார் தெரிவித்த திமுகவுக்கு, புகாரை நிரூபிக்க முடியுமா? என சவாலும் விட்டார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பாரத் நெட் திட்ட டெண்டரில் முறைகேடு நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தற்பால் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாரத்நெட் டெண்டர் தொடர்பாக தொடர்ந்து புகார் செய்து வந்த அறப்போர் இயக்க நிர்வாகிகள் தரப்புடன் மத்திய வர்த்தக அமைச்சகம் தரப்பில் காணொலி மூலம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் பாரத் நெட் திட்ட டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த டெண்டரில் முறைகேடு புகாரில் முகாந்திரம் இருப்பதாக கருதும் நிலையில் டெண்டரை ரத்து செய்து மறு டெண்டர் விடுமாறு மத்திய வர்த்தக அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவு, தமிழக அரசுக்கும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.






