கொரொனா சிகிச்சை முடிந்து வெள்ளை மாளிகை திரும்பிய டிரம்ப்..!
கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து முக கவசம் அணிந்தவாறு நடந்தே வெளியே வந்த டிரம்ப் அங்கிருந்த காரில் ஏறி சிறிது தூரம் சென்றார்.
அங்கு இருந்த கடற்படை ஹெலிகாப்டரில் ஏறி வெள்ளை மாளிகையை அடைந்தார். அங்கு முககவசத்தை அகற்றிவிட்டு புகைப்படங்களுக்கு போஸ் தந்தார். முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர் உடல் நலத்துடன் இருப்பதை உணர்வதாக தெரிவித்திருந்தார்.
கொரொனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அது உங்களை அடக்கியாள அனுமதிக்க விட வேண்டாம் என்றும் டிரம்ப் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். கொரொனா வைரஸ் தொற்றால் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி விட்டதாக வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 72 மணி நேரமாக அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல் விவாதத்தில் பங்கேற்ப்பார் என்று அவரது பரப்புரை செய்து தொடர்பாளர் தெரிவித்தார்.






