--- --:--:-- --

சாலையோரம் டன் கணக்கில் வீசப்பட்ட சத்துமாவு மூட்டைகள்… அப்படித்தான் கொட்டுவோம் என தெனாவட்டு பதில் வேறு..? மானாமதுரையில் நடந்த அவலம்!!

35

தமிழக அரசின் சார்பில், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுவது போல், பால்வாடி குழந்தைகள், கைக் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட அருமையான திட்டங்களில் ஒன்று தான் இணை உணவு வழங்கும் திட்டம்.

 

சமூக நலத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, இதற்காக ஆயிரக்கணக்கான அங்கன் வாடி பணியாளர்கள் நியமிக்க்ப்பட்டுள்ளனர்.குறிப்பாக கிராமப்புற ஏழைகளுக்கு வரப்பிரசாதம் போன்ற திட்டம் தான் இந்த இணை உணவு வழங்கும் திட்டம். கிராமப்புறங்களில் சத்து மாவு என்று கூறப்படும் இந்த ஊட்டச்சத்து மாவை குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர்க்கு வழங்கி ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

 கொள்ளை லாபம் பார்க்கும்  தனியார் நிறுவனங்கள்

 

இந்த நல்ல நோக்கத்திற்காக பல கோடிகளை ஒதுக்குகிறது அரசு.இந்த சத்து மாவு சப்ளை செய்ய மாவட்டந்தோறும் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படுகிறது. இதில் கோடிகளில் கொள்ளை லாபம் பார்க்கும் இந்த தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு நடத்தும் மோசடிகள் கொஞ்ச நஞ்சமில்லை என்பது ஊரறிந்த விஷயம். இதில் ஆளும் கட்சிப் புள்ளிகளும் உடந்தை என்பது வேறு விஷயம்.

சரி.. விஷயத்துக்கு வருவோம்..இந்த கொடுமையான கொரோனா காலத்தில் கடந்த 4 மாதங்களாக அங்கன்வாடிகள் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால், இணை உணவான இந்த சத்து மாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களை பயனாளிகளின் வீடு தேடிச் சென்றே பணியாளர்கள் வழங்குவார்கள் என்றே அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

 

அப்படி வீடு தேடிச் சென்ற இந்த சத்துணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி. இதற்கு, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சாலையோரம் டன் கணக்கில் குப்பைக் கிடங்கில் இந்த இணை உணவுப் பாக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளதே சாட்சியாக உள்ளது.

 


ஊட்டச்சத்து நிறைந்த இந்த இணை உணவுப் பாக்கெட்டுகள் யாருக்கும் வழங்கப்படாமல் சாலையில் வீசப்பட்டது கண்டு பலரும் அதிர்ச்சியும் வேதனையையும் அடையச் செய்துள்ளது. இந்த இணை உணவு மூலமாக பலரும் தங்களுது ஊட்டச்சத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.


 

ஆனால் இதனை முறையாக கொண்டு சேர்க்காமல் மானாமதுரை பைபாஸ் சாலையில் வீசி எறிந்து, சாலை ஓரம் கேட்பாரற்று போடப்பட்ட இந்த இணை உணவுப் பொட்டலங்கள் ஒட்டு மொத்தமும் தேதி காலாவதியாகிப் போனவை என்பது தான் கூடுதல் தகவலாகும். டெண்டர் மூலம் மாதா மாதம் இவ்வளவு சப்ளை செய்வதாக கணக்குக் காட்டி உரிய தொகையை ஊழலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி விட்டு கறாராக தனியார் நிறுவனங்கள் வசூலித்து விடுகின்றன.

பொய்க் கணக்கு காட்டி விட்டு ஏழை மக்களுக்கு சேரவேண்டிய இந்த உணவுப் பாக்கெட்டுகளை காலாவதி ஆகும் வரை வைத்திருந்துவிட்டு, சாலையோரம் பகிரங்கமாக கொட்டிய சம்பவம் குறித்து நாம் விசாரணையில் இறங்கினோம்.

 

இந்த ஊட்டச்சத்து பொருட்களை சாலையில் மூட்டை மூட்டையாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர் தங்கசாமியிடம் கேட்டதற்கு, நாங்கள் தான் சாலையில் கொட்டினோம். உங்களால் என்ன செய்ய முடியும்? யாரும் எங்களை கேட்க முடியாது என தெனாவட்டாக பதிலளித்தார்.

 

இதன் மூலம் அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ தெரிந்தே தான் இந்த சங்கதிகள் நடப்பதாகவே நமக்கு சந்தேகம் எழ, மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அலுவலரான சரவணனிடம், இப்படி காலாவதியாகி, புழுமொய்த்த நிலையில் இணை மாவு பொருட்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ள விவகாரத்தை கொண்டு சென்றோம். அதற்கு அவர், இன்று (ஞாயிற்றுக் கிழமை) தமிழகம் முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு . அதனால் சம்பவ இடத்திற்கு நேரில் வரமுடியாத நிலை. நாளை என்னவென்று விசாரிக்கிறேன் என அமைதியாக கூறி ஒதுங்கிக் கொண்டார்.

 

இந்த கொரோனா காலத்தில் வேலை இழந்து, போதிய வருமானமின்றி ஏழைகள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமில்லை. இந்த நேரத்தில் தான், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோருக்கான அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்று வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் அவசியக் கடமை. இந்த இணை உணவை உரியவர்களுக்கு கொண்டு சேர்க்காமல், சாலையில் வீசி எறிந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அத்துணை பேர் மீதும் நடவடிக்கை பாய வேண்டியதும் அவசியம்.

மேலாளர் தங்கசாமி
மேலாளர் தங்கசாமி

எங்களை யாரும் ஒண்ணும் புடுங்க முடியாது!

இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நிர்வாகமும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் ஒருமையில் தெனாவட்டாக பேசியதுடன், அப்படித்தான் செய்வோம்.. எங்களை யாரும் ஒண்ணும் புடுங்க முடியாது… என அரசு நிர்வாகத்தையே கேலிக்கூத்தாக்கிய தனியார் நிர்வாகத்தின் மேலாளர் தங்கசாமி  மீது உரிய நடவடிக்கை பாய்வது அவசியம். அத்துடன் ஏழைகளுக்கு சேர வேண்டிய இணை உணவை உரியவர்களிடம் சேர்க்காமல் குப்பையில் கொட்டி விட்டு கள்ளக் கணக்கு காண்பித்து அரசுப் பணத்தை சுரண்டும் தனியார் நிறுவனம் மீதும் நடவடிக்கை அவசியம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon