நடிகை குஷ்புவுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் பகிரங்க கண்டனம்…! கட்சியிலிருந்து வெளியேறுவாரா? வெளியேற்றப்படுவாரா?
மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் குஷ்பு வகிக்கும் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி பறிபோகும் எனக் கூறப்படும் நிலையில், பாஜக பக்கம் தாவவும் குஷ்பு தயாராகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசிய அளவில் பதவியை பெற்றவர் நடிகை குஷ்பு. தற்போது கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ளார். தனி ரூட்டில் செயல்படும் குஷ்பு,அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுப்பதால் அப்பதவியில் சச்சின் பைலட்டை நியமிக்க வேண்டும் என குஷ்பு கூறியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக குளறுபடி ஏற்படுத்தி வரும் பைலட்டை எப்படி ஆதரிக்கலாம் என குஷ்புவுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கொந்தளித்தனர்.

இந்நிலையில் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கட்சியின் கருத்துக்கு எதிராக குஷ்பு, புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனால் குஷ்புக்கு எதிராக காங்கிரசில் பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கே.எஸ். அழகிரி தனது டிவிட்டர் பதிவில், காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு;கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு; வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை கொரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது .
ஜனநாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர் கட்சிக்கு வெளியே கருத்து கூறுவது ஏதோ லாபம் எதிர்ப்பார்ப்பது போல் உள்ளது என கே.எஸ்.அழகிரி ஓபனாக கருத்து தெரிவித்துள்ளதால், குஷ்பு காங்கிரசிலிருந்து வெளியேற்றப்படலாம் ; அல்லது வெளியேறுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில் குஷ்புவுக்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் சேர்ந்தாலும் ஆச்சர்யமில்லை என்றும் கூறப்படுகிறது.






