--- --:--:-- --

தமிழகத்தில் ஊரடங்கு எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு வெளியாகிறது!!

11

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 14-ந் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வர உள்ளது. ஆனால் நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7600 ஆகவும், பலி எண்ணிக்கை 249 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தில் பாதிப்பு 911 ஆகவும், உயிரிழப்பு 9 ஆகவும் உயர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்து பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ளது.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இப்போது தான் வேகமெடுத்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்பதை பல மாநிலங்களும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தன்னிச்சையாகவே ஊரடங்கை ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டித்துள்ளன.

 

இதனால் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன. மத்தியில் இருந்து வந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் குழுவும், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. எனவே தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதனால், இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்த உள்ள ஆலோசனை, மற்றும் மாலையில் கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. தமிழக அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு நீட்டிப்பது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் ஊரடங்கால் பாதிக்கப்படுவோருக்கு கூடுதல் நிவாரண உதவிகள் வழங்குவது பற்றிய அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுவார் என்றும் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon