திமுக-காங் இடையே லடாய் வெடித்தது..!! கூட்டணி தர்மத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு!!
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக காங்கிரஸ் பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதனால் இரு கட்சிகளிடையான கூட்டணியில் லடாய் பகிரங்கமாக வெடித்துள்ளது. நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரசின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு திமுக போதிய இடங்களை ஒதுக்கவில்லை என்ற குமுறல் இருந்து வந்தது.இந்நிலையில் தேர்தல் முடிந்து நாளை மாவட்ட, ஒன்றிய கவுன்சில் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரசுக்கு கேட்ட பதவிகள் மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இரு கட்சிகளிடையேயான கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவியில் காங்கிரசுக்கு ஒன்று கூட ஒதுக்கப்படவில்லை. 303 ஒன்றிய தலைவர் பதவிகளில் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடக்கத்தில், எந்தவித ஒப்பந்தமும் இL ஒதுக்கீடு குறித்து மாவட்ட அளவில் பேசித் தீர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மாவட்ட அளவில் திமுகவிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. கூட்டணி தர்மத்திற்கு புறம்பான திமுகவின் இந்தச் செயல் வேதனையளிக்கிறது என கூறியுள்ளனர்.
நாளை, உள்ளாட்சி முக்கியப் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை, திமுகவுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பல இடங்களில் காங்கிரசின் ஓரிரு கவுன்சிலர்களின் தயவில் தான் திமுகவால் பதவிகளை கைப்பற்ற முடியும். இந்தச் சமயத்தில் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்தச் சலசலப்பு நாளைய தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.அது அதிமுகவுக்கும் சாதகமாகும் என்பதால் தமிழக அரசியலிலும் திமுக கூட்டணியிலும் உச்ச கட்ட பரபரப்பாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் – திமுக இடையேயான கூட்டணி தொடருமா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.





