எஸ்.பி.பி. உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி… நாளை காலை 11 மணிக்கு உடல் நல்லடக்கம்!!
மறைந்த பன்மொழி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல், திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள் என திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
50 ஆண்டுகளாக திரையுலகில் தனது இனிய குரலால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த ‘பாடும் நிலா’ எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் உயிரிழந்தார். எஸ்.பி.பி.யின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எஸ்.பி.பியின் மறைவுக்குகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு,பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இந்திய திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.பி.யின் உடல் இன்று மாலை 4 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, நுங்கம்பாக்கம் இல்லத்தில் அரசியல் பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள், இசைக் கலைஞர்கள், பொதுமக்கள் என திரளானோர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நல்லடக்கம்
எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் செங்குன்றம் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.







