--- --:--:-- --

செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி போலீசில் புகார்

udaya nithi

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து செங்கல்லை திருடிவிட்டதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி, கடந்த 27.01.2019 அன்று அடிக்கல் நாட்டினார். நிலம் கையப்படுத்துதல் உள்ளிட்ட சில நிர்வாகச் சிக்கல்களால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளாத்திகுளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

 

மேலும்,மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என்று கூறி, ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பணி நடைபெறவில்லை என்பதை புரிய வைப்பதற்காக, அவர் இவ்வாறு செய்தார். உதயநிதி ஸ்டாலின் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்தது, வாக்காளர்கள் மத்தியில் எடுபட்டது.

 

அத்துடன், சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் வைரலானது. பலர் உதயநிதியை பாராட்டினர். இன்னும் சிலர், அந்த செங்கல்லையும் ஆட்டைய போட்டதில் திமுக என்று நிரூபித்துவிட்டீர்கள் என்று கிண்டலும் செய்தனர்.

 

இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடிவிட்டதாக, உதயநிதி ஸ்டாலின் மீது கோவில்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் தனது புகாரில், எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்க்குள் இருந்து செங்கலை திமுக-வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடி கொண்டு வந்துள்ளார்.

 

இந்த உண்மையை அவரே விளாத்திக்குளம் பேருந்து நிலையத்திற்க்கு முன்பு நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரது இந்த செயல், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380ன்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வளாகத்தில் இருந்து செங்கலை திருடிய உதயநிதி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் திமுகவினர் செய்த பிரசாரத்திற்கு, போலீஸில் புகார் செய்ததன் மூலம் பாஜக தரப்பில் பதிலடி தரப்பட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon