தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு..!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. பிகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது.
கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சமாக குறைந்தது.
இதையடுத்து, இறந்தவர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்களில் தகுதியான வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.
மறுபுறம், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றும் உரிய தகவல்களை அளிக்காத சுமார் 12 லட்சத்து 43 ஆயிரம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.
இவற்றிற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் ஜனவரி 30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படிவங்கள் சரிபார்க்கப்பட்டு வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
முன்னதாக நேற்றுவரை 13 லட்சத்து 3 ஆயிரத்து 487 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், வரைவு வாக்காளர் பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவித்து படிவம் 7-ஐ 35 ஆயிரத்து 646 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.





