தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி ஒத்திவைப்பு..!
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, வரும் 23-ஆம் தேதிக்கு வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழ்நாட்டில் 97 லட்சத்து 38 ஆயிரம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனர்.
கடந்த 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இதனால், தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரமாகக் குறைந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்கவும், 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக பெயர்களைச் சேர்க்கவும் கடந்த 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கு நீட்டிக்கப்பட்ட அவகாசம் கடந்த 10 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு நாளை மறுதினம் (நாளை) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.





