இறந்த காதலியை திருமணம் செய்த காதலன்..!
அசாமில் இளைஞர் ஒருவர் இறந்து போன தன் காதலியை திருமணம் செய்து கொள்ளும் காட்சி இணையத்தில் பலரையும் கலங்க செய்துள்ளது. இறந்து போன தன் காதலியை விடாப்படியாக திருமணம் செய்து கொண்டிருக்கும் தெய்வீக காதல் என்று ஒட்டுமொத்த சமூக வலைதளத்திலும் காதல் கதாநாயகனாக மாறியுள்ளார்.
காதல் என்ற போர்வையில் கொலை, பாலியல் பலாத்காரம் என அதிரவைக்கும் இன்றைய நிகழ்வுகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு காதலன். அந்தப் பெண்ணும் அவரும் உருகி உருகி நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
சமீபத்தில் இருவரும் பெற்றோரிடத்தில் தங்கள் காதலை தெரியப்படுத்தி திருமணம் செய்ய ஒப்புதல் வாங்கி இருந்தனர். ஆனால் அதற்குள் விதியின் சதியால் காதலி கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
செய்தியறிந்து பதறி அடித்து ஓடி வந்த காதலன் உயிரற்ற உடலாக கடந்த காதலியின் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டது பெண்ணின் குடும்பத்தை கலங்க செய்தது. இனி வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என சத்தியமும் செய்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த கலங்கிய நெட்டிசன்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என கமெண்ட் செய்து இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.





