--- --:--:-- --

சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல் – கார்த்தி சிதம்பரம் கண்டனம்

8

ரசியல் விமர்சகர் மற்றும் பிரபல யூடியூப் சேனலை நடத்தி வரும் சவுக்கு சங்கர், புதிய வழக்கில் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “அப்பட்டமான துன்புறுத்தல்” என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

யூடியூபில் அரசியல் கட்சிகள், குறிப்பாக தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் அதன் நிர்வாகக் குறைகளை வெளிப்படையாக விமர்சித்து சவுக்கு சங்கர் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக, அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

 

இந்த சூழ்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் ஆயிஷா என்பவர் கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தார். அவதூறான கருத்துகளைப் பரப்பி தன்னிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை மிரட்டிப் பறித்ததாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கின் அடிப்படையில், காவல்துறையினர் இன்று காலை சவுக்கு சங்கரை கைது செய்ய அவரது இல்லத்திற்குச் சென்றனர். வீட்டைச் சுற்றிவளைத்த காவல்துறையினர், உள்ளே பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, சவுக்கு சங்கரைக் கைது செய்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்பாக, சவுக்கு சங்கர் பதிவுசெய்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.

 

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ (முன்னர் டிவிட்டர்) தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “நான் சவுக்கு சங்கரின் யூடியூப் பக்கத்தை பின்தொடரவில்லை, அவரது கருத்துகளை நான் ஆதரிப்பதும் இல்லை. ஆனாலும், ஒரே நபர் மீது அடுத்தடுத்து தொடுக்கப்படும் கைது நடவடிக்கைகள் என்பது அப்பட்டமான துன்புறுத்தல் செயல்” என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

Right Menu Icon