--- --:--:-- --

பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் – சீமான்

9

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியைத் தொடுவதாக அவர் கவலை தெரிவித்தார். ஏற்கனவே ஒரு கோடி மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 36 லட்சம் பேரை இணைத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெருமைப்பட ஏதுமில்லை என்று சீமான் கூறினார்.

 

60 ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிகள், பெண்கள் தினமும் ரூ.30 கூட சம்பாதிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியிருப்பதே உண்மை என்று குற்றம் சாட்டினார். இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் தேர்தலைக் குறிவைத்து கூடுதல் நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. “இந்தக் கூடுதல் நபர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை ஏன் கடந்த ஆண்டு கொடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

 

தன்மானம் மிக்க தமிழன், தனது தாய் ரூபாய் ஆயிரத்துக்கு கையேந்தி நிற்பதை ஏற்கமாட்டான் என்றும், பஸ்ஸில் மகளிருக்கு இலவசக் கட்டணம் என்றாலும், அந்தப் பணத்தை அவர்களின் தந்தை அல்லது சகோதரனிடம் வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் சாடினார். ஆளும் கட்சிகள் செய்தி மற்றும் விளம்பர அரசியலைத் தாண்டி, சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை, வரவும் மாட்டார்கள் என்று சீமான் குறிப்பிட்டார். மக்கள் அரசியல் வந்திருந்தால், மக்கள் உழைத்து சம்பாதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி இருப்பார்கள்.

 

மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியையும் பிப்ரவரி மாதத்தில் கொடுக்க இருப்பதாக சொல்வதையும் தேர்தலைக் குறி வைத்த செயல் எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் எந்த அமைச்சர் துறையில் ஊழல் நடக்கவில்லை என்றும், இவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஏன் அக்கறை வரவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

 

பத்து லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கும் திமுக அரசாங்கம், ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறது என சொல்ல முடியுமா? என்று கேட்டு, “இடி வந்தால் டாடி, மோடியைப் பார்க்க ஓடுகிறார்” என்று விமர்சித்தார். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத முதல்வர் ஏன் இப்போது ஓடிச் சென்றார் என்றும் கேள்வி எழுப்பினார். நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுளைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். இதுவரை முருகன் மீது வராத பாசம் ஏன் இப்போது அவர்களுக்கு வருகிறது என்று வினவினார்.

 

காவிரி நீர் பிரச்சனைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா? அயோத்திப் பிரச்சனையை வைத்து அரசியல் செய்தார்கள். இப்போது ராமர் கோயில் கட்டிவிட்டதால், அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததால், முருகனை கையில் எடுத்துள்ளார்கள். அதன் மூலம் திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பிரச்சனையாக்க முயற்சி நடப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது பா.ஜ.க. என கருணாநிதி பாராட்டிப் பேசியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம். பா.ஜ.க.வுக்கு சதித் திட்டம் தீட்டி கொடுப்பது தி.மு.க. தான். அவர்கள் வந்துவிடுவார்கள் எனப் பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளைத் தக்கவைக்க தி.மு.க. அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

 

இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்வில் பாரதி குறித்துப் பேசினேன். தி.மு.க. மேடையிலும் பாரதி குறித்துப் பேசச் சொன்னால் பேசுவேன். தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசியது அப்போது இனித்ததா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

Right Menu Icon