காவலர் வீட்டின் சுவற்றில் பயங்கரவாத வாசகங்கள்..!
வாசகங்களை எழுதி வைத்த காவலரை போலீசார் கைது செய்தனர். ஓசூரை ஒட்டி உள்ள கர்நாடக மாநில எல்லை கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் பெங்களூரு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.
அதிகாலை வேளையில் வீட்டிலிருந்து வெளியே வந்தவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தனது வீட்டு சுவற்றில் பயங்கரவாத வாசகங்கள் எழுதி இருப்பதை கண்டு காவலர் முனிராஜ் அதிர்ந்து போக்கியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதி இருந்த அந்த வாசகத்தில் மூன்றாம் உலகப் போர் என்றும் எச்சரிக்கை உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து முனிராஜ் காவல் நிலையத்திற்கு புகாரளிக்க எழுதிய நபரை கண்டறிய சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
ஆனால் சந்தேகப்படும்படியாக எந்த நபரும் சிசிடிவி காட்சியில் பதிவாகாத நிலையில் போலீசாரின் பார்வை வீட்டின் உரிமையாளரான காவலர் முனிராஜின் பக்கமே திரும்பியது. முனிராஜிடம் போலீசார் வழக்கமான பாணியில் விசாரிக்க ஒரு கட்டத்தில் தாமே பயங்கரவாத வாசகங்களை எழுதியதை அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் முனிராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவருக்கு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.





