இந்தியாவின் முதல் கடல் பாலமான பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு..!
இந்தியாவின் முதல் கடல் பாலமான ராமேஸ்வரத்தில் உள்ள பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். 1914-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தக் கடல் பாலத்தில், கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன.
ஏறத்தாழ 2.3 கி.மீ. நீளமுள்ள இது, இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். 2010 -ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பாந்திரா-வொர்லி கடற்பாலம் திறப்பதற்கு முன்பு வரை, இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது. பாம்பன் தொடருந்துப் பாலத்திற்கு அருகில், 1988-ஆம் ஆண்டு ஒரு சாலை போக்குவரத்துப் பாலம் திறக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு 110 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தப் பழைய பாலம், கடலின் நடுவில் கம்பீரமாக நின்று, பல புயல்களைக் கண்டுள்ளது. இந்த பழைய பாலத்திற்கு மாற்றாக, புதிய பாம்பன் பாலம் கட்டும் திட்டம் 2019-ல் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாம்பன் தூக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
இந்நிலையில் பழைய மேம்பாலத்தை இடித்து அகற்ற தனியார் நிறுவனங்களுக்கு இந்திய ரயில்வே டெண்டர் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் தீவை இந்தியாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் பாலம் 111 ஆண்டுகளை நிறைவு செய்து நம்மிடமிருந்து விடைபெற காத்திருக்கிறது.





