கொரோனாவுக்கு எதிரான போர் : உலகத் தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்..! 65% ஆதரவுடன் அமோகம்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலகத் தலைவர்களிடையே பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடிக்கு 65 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய் உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் உறைய வைத்துள்ளது. உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளை கதற வைத்துள்ள இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து 1,84,280 என உயர்ந்துள்ளது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் அதி வல்லமை படைத்த வல்லரசு நாடுகளின் தலைவர்களே செய்வதறியாது மிரண்டு போயுள்ளனர்.
கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்களின் வெளிநடமாட்டத்தை குறைத்து, வைரஸ் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகள் ஒன்றே தீர்வு என கருதப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு, அவசர நிலை என கடுமையான சட்டங்களை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் இந்த முயற்சியை ஒரு போர் போன்றே உலக நாடுகளின் தலைவர்கள் வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில், உலகத் தலைவர்களின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மார்னிங் கன்சல்ட் என்ற சர்வதேச நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியப் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் தான் மெச்சத்தகுந்தது என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ந் தேதி நிலவரப்படி, முதலிடத்தில் உள்ள பிரதமர் மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 65 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை குறிப்பிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் உலக நாடுகளை பிரதமர் மோடி வழிநடத்துகிறார். நாட்டு மக்களுக்கு ஒருபுறம் பாதுகாப்பு அளித்துக் கொண்டே மறுபுறம் உலக நாடுகளுக்கு தேவையான பாதுகாப்புகளை செய்து வருகிறார். இதனால் உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.
130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்த படியாக 2-வது பெரிய நாடு ஆகும். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,797 ஆகவும், உயிரிழப்பு 681 எனவும் உள்ளது, ஆனால் 33 கோடி மக்கள் தொகையுடன் இந்தியாவை விட 4 மடங்கு குறைந்த மக்கள் உள்ள அமெரிக்காவிலோ கொரோணா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 8.5 லட்சமாகவும், உயிரிழப்போ கிட்டத்தட்ட அரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இதைவிட இந்தியாவில் தமிழ்நாடு போன்ற ஒரு மாநில அளவிலான மக்கள் தொகை மட்டுமே கொண்ட இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், பெல்ஜியம் ,ஜெர்மனி போன்ற நாடுகளிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு மிக மிக குறைவு என்றே பார்க்கப்படுகிறது.







