--- --:--:-- --

திருப்பூர் கல்வித்துறையால் திணறும் மாணவர்கள்! ஜெய்வாபாய் பள்ளி அலங்கோலம்!

sdgsdg

பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி தேர்வு மையத்தில், போதிய வசதிகள், திட்டமிடல் இல்லாததால், மாணவ, மாணவியர் திணறுகின்றனர்.

 

மிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், நடப்பு கல்வியாண்டில் கொரோனா தாக்கம் குறைந்து, பள்ளி – கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

 

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மே 5ம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், அடுத்த நாளான மே 6ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்கி, நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, 91 தேர்வு மையங்களில், 25 ஆயிரத்து 717 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

 

இதில், தமிழகத்தில் மிகப்பெரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற சிறப்பை பெற்ற ஜெய்வாபாய் பள்ளியும் ஒன்று. பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவியருக்கு தேர்வு மையமாக உள்ள இப்பள்ளியில், ஏராளமானவர்கள் தேர்வு எழுத வந்து செல்கின்றனர். ஆனால், மாணவ – மாணவியர் வந்து செல்ல உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பெற்றோர்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

 

இது தொடர்பாக, நமது “குற்றம் குற்றமே” இதழுக்கு பெற்றோர் தரப்பில் சிலர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வுகள் இம்முறை, அக்னி நட்சத்திர வெயிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வின் முதல் நாளான மே 5ம் தேதி, தமிழ்த் தேர்வு நடைபெற்றது. அன்றைய தினம் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்த கூத்துகள், மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

 

பெரிய தேர்வு மையமான ஜெய்வாபாய் பள்ளியில், மாணவிகள் எளிதாக, சிரமமின்றி வந்து செல்ல எந்தவொரு நடவடிக்கையையும், முறையாக மேற்கொள்ளப்படவில்லை. பல நூறு மாணவியர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்குள் பதற்றமுடன் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அங்கு ஏற்கனவே கடும் நெரிசல் இருப்பதால், அவர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு உண்டாகிறது.

 

தேர்வு எழுதும் பிற பள்ளி மாணவர்களின் புத்தக பைகளை வைக்க, ஒரேயொரு ஒரு அறை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் ஒரே நேரத்தில் மாணவியர்கள் அங்கு செல்வதால், கடும் நெரிசலும் அவதியும் உண்டாகிறது. இதை சரி செய்ய பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட யாரும் அங்கு நிறுத்தப்படுவதில்லை.

 

பள்ளி நுழைவாயில் அருகே, தனியார் கல்லூரிகள் சார்பில் பல ஏஜெண்டுகள், துண்டு பிரசுரங்களுடன் மாணவிகளை மொய்த்துக் கொண்டு வெளியே செல்ல விடாமல் பிரசாரம் செய்கின்றனர். இதனால், மாணவர்கள் வெளியே வர முடியாமல் பள்ளிக்குள்ளேயே தவிக்கும் சூழல் உள்ளது.

 

ஜெய்வாபாய் பள்ளி நுழைவாயில் முன்பு டூவிலர்களுடன் பெற்றோர் காத்திருக்க தொடங்கிவிடுவதால், அந்த சாலையில் வாகன நெரிசல் உண்டாகிறது. இதையெல்லாம் சரி செய்ய, போதிய போலீஸ்காரர்களும் அங்கு இல்லை. ஒன்றிரண்டு போலீசாரால், பெற்றோர் – மாணவியரை சமாளிக்க முடிவதில்லை.

 

கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அதன் அபாயம் இன்னமும் முற்றிலும் குறைந்துவிடவில்லை. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியுள்ள நிலையில், ஜெய்வாபாய் பள்ளி தேர்வு மையத்திலோ, சந்தைக்கடைக்குள் நுழைந்தது போல், முண்டியடித்து மாணவிகள் செல்வதை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது.

 

இதையெல்லாம் மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும் சரி செய்யாமல் மவுனமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. தேர்வுக்கு நன்கு தயாராகி மாணவிகள் வந்திருந்தாலும், பள்ளி வளாகத்தில் நடக்கும் கூத்துகளை பார்த்தால், நிச்சயம் மயக்கமே வந்துவிடும். அதிகாரிகளின் அலட்சியத்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கக்கூடாது.

 

எனவே, கோடை வெயிலுக்கு அதிகாரிகள் இதமாக ஏசியில் அமர்ந்து கொண்டிருக்காமல், பொதுத்தேர்வு நடைபெறும் ஜெய்வாபாய் பள்ளியை பார்வையிட வேண்டும்; அங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். நெரிசலின்றி, முண்டியடித்து மாணவிகள் செல்லாமல், எளிதாக சென்று வரும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள மற்ற மையங்களிலும் இத்தகைய பிரச்சனை உள்ளதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர் கூறினர்.

 

ஏற்கனவே திருப்பூர் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் உள்ளிட்டவர்களின் செயல்பாடுகள், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்திலாவது பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்த வேண்டும்.

Right Menu Icon