செல்போன் செயலி மூலம் போலியான நீட் சான்றிதழ் தயாரித்த மாணவி..!
நீட் தேர்வில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவி செல்போன் செயலி மூலம் போலியான மதிப்பெண் சான்றிதழை தயாரித்ததாக காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பரமக்குடியை சேர்ந்த மாணவி மருத்துவ படிப்பில் சேருவதற்காக கலந்தாய்வின் போது சமர்ப்பித்த நீட் மதிப்பெண் சான்றிதழ் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது தந்தை பாலச்சந்திரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மாணவி கைது செய்யப்பட்டார் .சென்னை அழைத்து வரப்பட்ட மாணவியிடம் பெரியமேடு காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை பிப்ரவரி 1ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்து சான்றிதழில் மதிப்பெண்ணை எடிட் செய்ததாக மாணவி வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதை நண்பர்களிடம் கற்றுக் கொண்டதாகவும் அதை காவல்துறையினரிடம் அவர் செய்முறையாக எடிட் செய்து காட்டியதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கலந்தாய்வு சான்றிதழை அச்சடித்து கொடுத்தது யார் என்பன உள்ளிட்ட விபரங்கள் பற்றி விசாரிக்க மாணவியை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






