முதல்வர், அமைச்சர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு: ஸ்டாலின் பேச்சு
ஊழல் புரிந்த முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் உரிய தண்டனை கிடைக்கும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். ஆத்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
அதிமுகவினர் தாங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? என்ற கேள்வியை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சம் கோடி முதலீட்டை இந்த தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
அதெல்லாம் பொய். மாநாடு நடந்தது உண்மை தான். அதேபோல, வெளிநாட்டுக்கு முதல்வர் உட்பட சில அமைச்சர்கள் கோட் – சூட் போட்டுக் கொண்டு சுற்றுலா சென்று வந்தது உண்மைதான். மறுக்கவில்லை. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 3 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்தோம் என்று பழனிசாமி சொல்கிறாரே. அதன் மூலமாக தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தொழிற்சாலைகள் கொண்டு வந்தீர்கள்? எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள்? அதற்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள்.
நீர்நிலைகளை மீட்டெடுத்தேன். குடிமராமத்து பணிகள் செய்தேன் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். போலி பில் போட்டு பணத்தைச் சுருட்டி இருக்கிறார்களே தவிர, நீர்நிலைகளை எங்கும் தூர்வாரவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்தேன் என்று சொல்கிறார். நேற்று உதயநிதிதான் செங்கலை எடுத்து எல்லா இடங்களிலும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் எய்ம்ஸ் அடிக்கல்லை எடுத்துக் காண்பித்திருக்கிறார்.
தமிழக அமைச்சர்கள் எவ்வளவு சொத்துகள் சேர்த்திருக்கிறார்கள் என்று பத்திரிகையில் ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள். கொள்ளையடித்து இருக்கும் இவை எல்லாம் இப்போது வெளி வருகிறதோ இல்லையோ நாம் தான் விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரில் தொடங்கி, கடைக்கோடியில் இருக்கும் அமைச்சர்கள் வரையில் செய்திருக்கும் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அவர்கள் அத்தனை பேருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




