பெண்கள் பற்றி பிரசாரத்தில் லியோனி வர்ணனை… திமுகவினர் எரிச்சல்
நம்ம ஊர் பெண்கள் பலூன் மாதிரி ஊதிக்கிடக்குறாங்க என்று கோவை பிரசார கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். அவரது பேச்சால் பெண்கள் முகம் சுளிக்க, திமுகவினரோ அதிருப்தி அடைந்தனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற தொகுதிகளில் ஒன்றாக, கோவை தொண்டாமுத்தூர் உள்ளது. இங்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திமுக சார்பில் காங்கேயத்தை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதியும் மோதுகின்றனர்.
இந்த நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவின் நட்சத்திர பேச்சாளரும், பட்டிமன்ற நடுவராகவும் இருந்த திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, சிறுவாணி தண்ணின்னா உலகத்துக்கே பிடிக்கும். அந்தத் தண்ணி கோயம்புத்தூர் மக்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது” என்றார்.
எனவே தான், எல்லா மக்களுக்கும் தண்ணீர் வழங்குவதற்காக கொண்டு வந்த திட்டம்தான் சூயஸ் திட்டம். அந்தத் திட்டத்தை வரவிடாமல் தடுத்தது, இன்றைக்கு உள்ளாட்சி அமைச்சராகவும், நாளை ஜெயில் கைதியாகவும் இருக்கப்போகும் வேலுமணி என்கிற ஜென்மச்சனி. தமிழகத்தை பிடித்த ஜென்மச்சனி என்று லியோனி நக்கலாக குறிப்பிட்டார்.
அதாவது, இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதுவும் கோவையில்தான் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்துக்குக் கொடுக்க கோவை மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளதை, லியோனி இப்படி குத்தலாக கூறினார். ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் சூயஸ் திட்டம் நல்ல திட்டம் என்றும், அதை நிறைவேற்ற விடாமல் வேலுமணிதான் தடுப்பதாகவும் திமுகவினரே குழம்பிப்போனார்கள்.
அத்துடன் நிற்காமல் பெண்கள் குறித்தும் முகம் சுளிக்கும் வகையில் லியோனி பேசினார். அவர் பேசும் போது, “பாரீன் மாட்டு பாலை குடித்து குடித்து நம்ம ஊர் பெண்கள் பலூன் மாதிரி ஊதிக்கிடக்குறாங்க. அவர்களோட பிள்ளைகளும் அதே மாதிரி ஊதிக்கிடக்குறாங்க. ஒரு காலத்துல பெண்களோட இடுப்பு 8 மாதிரி இருக்கும். குழந்தைகளை தூக்கி இடுப்புல வச்சா அப்படியே உட்கார்ந்துக்குவான்” என்றார்.
இதை பார்த்து திமுகவினர் மிகவும் கடுப்பானார்கள். வேட்பாளரை வைத்துக் கொண்டே தரக்குறைவாக விமர்சிப்பதோடு ஆபாசமாகவும் பேசினால், எப்படி ஓட்டு கிடைக்கும். லியோனி பிரசாரம் செய்வது திமுகவுக்கு ஓட்டு வாங்கவா, வேட்டு வைக்கவா என்று திமுகவினர் முணுமுணுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




