--- --:--:-- --

கண்ணியத்தோடு பிரசாரம் செய்யுங்க.. திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

Stalin 06

தேர்தல் பரப்புரை செய்யும்போது திமுகவின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக உறுப்பினர்களே, பொதுமக்களிடையே தேர்தல் பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும்! அதை நினைவில் கொண்டு பேச வேண்டும்.

 

தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி – ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

அண்மையில் பெண்களின் இடுப்பு குறித்து திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கருத்து தெரிவித்து பெரும் சர்ச்சை உண்டானது. அது முடிவதற்குள், முதல்வரின் பிறப்பு குறித்து ஆ. ராசா பேசிய பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்டாலின் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon