வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி..!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுவது போல ஏப்ரல் 9-ஆம் தேதி புதுச்சேரியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் புதுச்சேரியில் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு இந்த முறை என்.ஆர் காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி மற்றும் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டில் நிலவி வருகிறது. இதற்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே புதுச்சேரியில் பிரதமர் மோடி சனிக்கிழமை என்.டி.ஏ கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சனிக்கிழமை தனி விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். பின்னர் மாலை சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அங்குச் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் அமைந்துள்ள அதித்தி ஹோட்டல் முதல் ராஜா திரையரங்கம் வரை பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்துகிறார். பிறகு என்.டி.ஏ பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
மேலும், பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்கிறார். பிரதமர் மோடியை வரவேற்கப் புதுச்சேயில் பா.ஜ.க சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு சென்னை திரும்பும் மோடி கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நட்சத்திர ஹோட்டலில் தங்கும் பிரதமர் மோடி ஏப்ரல் 4-ம் தேதி காலை, பா.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. சுமார் 150 பா.ஜ.க நிர்வாகிகள் இதில் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் நடக்கும் பிரச்சார கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என சொல்லப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் மோடியின் ஆலோசனைக் கூட்டமும் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் தேர்வில் நிலவும் இழுபறி காரணமாகப் பிரதமர் மோடி அதிருப்தியில் உள்ளதாகவும் இதன் காரணமாகவே பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் எந்தக் குழப்பமோ தாமதமோ இல்லை என்று மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.





