கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 8,000..!
அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 8,000, விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர் கல்வி ஆகிய திட்டங்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. குறிப்பாக தவெக அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப்பட இருக்கும் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் 5ஆம் தேதி தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையும், அதனைத் தொடர்ந்து 6ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தவெக அரசு பட்ஜெட்டில் கல்வித் துறையில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. ‘வெற்றித் தமிழகம்’ எனும் பெயரில் கல்வி துறையில் ஐந்து ஆண்டு தொலைநோக்கு திட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தேர்வு போன்ற கல்வி தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவும், பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மாணவர்களுக்கு பிணையில்லாமல் 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர் கல்வி வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிடவும், இளங்கலை பட்டப் படிப்பிலும், முதுகலை பட்ட படிப்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு 10% ஆக அதிகரித்து அறிவிக்கப்படவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு தொழிற் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக ஐந்து பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், 30 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
முக்கியமாக அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கை செலவுகளை குறைக்கும் வகையில் 8000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக், காலநிலை தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் பெரியார் இன்ஸ்டிடியூட் ஆப் எமர்ஜிங் டெக்னாலஜி பல்கலைக்கழகம் உருவாக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



