அனுமதி பெற்ற குவாரி மணலுக்கும் தடை விதிக்கலாமா? – தமிழக அரசுக்கு மதுரை கிளை கேள்வி
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி லிபின் பொன்னுசுவாமி லீலா என்பவர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சட்டவிரோத குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் அரசின் அனுமதியுடன் முறையாக செயல்படும் குவாரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மணல் மற்றும் கனிமங்களை கொண்டு செல்ல தடை விதிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, கனிமங்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு மற்றும் போக்குவரத்து சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதுடன், இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இதன் அடிப்படையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர்கள் கனிமங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்தாளர்கள் மட்டுமே.
குவாரிகள் விதிமுறைகளின்படி செயல்படுகிறதா இல்லையா என்பதை அவர்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பியதுடன், வழக்கு தொடர்பாக தமிழக அரசுத் தரப்பில் விரிவான பதில் மனுவை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.



