நாளை நீட் விலக்கு தொடர்பான சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்..!
நீட் விலக்கு தொடர்பான சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடிய சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா கடந்த சில மாதங்களாக ஆளுநரின் பரிசீலனையில் இருந்தது. இதையடுத்து மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். ஆளுநர் நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாளைய தினம் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புனித ஜார்ஜ் கோட்டைக்கு நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறுகிறது. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.






