அரசு ஓட்டுனர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை…!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்துவதால் நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது எனவும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுநர்கள் பணியின்போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்கக் கூடாது எனவும் அதனை நடத்துனரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிந்த பின்னர்பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு நடத்துனர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்களுக்கும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.






