சித்த மருத்துவ மசோதா: ஆளுநர் கருத்தை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றம்
சித்த மருத்துவ மசோதா மீது சட்டப்பேரவை மாண்பைக் குறைக்கும் வகையில் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சட்ட முன்வடிவு, நிதிச்சட்ட முன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருவதால், பேரவையில் ஆய்வு செய்வதற்காக ஆளுநரின் பரிந்துரைக்காக அனுப்பிவைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
இதையொட்டி, பொதுமக்களின் கருத்தை அறிந்து, மக்களாட்சியின் தூணாகக் கருதப்படும் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாக, அதில் தன்னுடைய கருத்துத் தெரிவித்து, அந்தக் கருத்துக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆளுநர் கூறி இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே சட்ட முன்வடிவில் திருத்தங்களை முன்மொழிய அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், பேரவையால் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, சட்ட முன்வடிவு மீது கருத்து கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய முதலமைச்சர், அவரின் கருத்துக்களை இந்த மாமன்றம் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்தார்.
ஆளுநரிடம் இருந்து வரப்பெற்றுள்ள கருத்துக்கள் அடங்கிய செய்தி, அவைக்குறிப்பில் இடம்பெறுவதை மாநில சுயாட்சியில் நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பினரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று முதலமைச்சர் கூறினார்.
இந்நிலையில், ஆளுநர் அனுப்பிய செய்தியில் இடம்பெற்றுள்ள அவரின் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய அந்த வார்த்தை அடங்கிய பகுதிகள் நிராகரிக்கப்படுவதாக கூறி தீர்மானத்தை கொண்டுவந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.





