--- --:--:-- --

திருப்பூரில் ஒரே கல்லில்  செதுக்கப்பட்ட ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலை..!

11

திருப்பூர், திருமுருகன்பூண்டி, ஸ்ரீ திருமகள் சிற்பக்கலைக்கூடத்தில் பல நுணுக்க வேலைப்பாடுகளுடன் ஒரே கல்லில்  செதுக்கப்பட்ட ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலை..!

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்ற ஊராகும். இங்கு 100 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி சிலைகள், அரசியல் தலைவர்கள், தூண்கள், விலங்குகள் உள்பட பல்வேறு வகையான சிலைகள் செய்யப்படுகிறது.

 

இதில் சாமி சிலைகள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

இந்த சிற்பங்கள் செய்வதற்கான கற்கள் திருப்பூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்குளியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் திருமுருகன்பூண்டி க்கு கொண்டு வரப்பட்டு சாமி சிலைகள் பிரத்யேகமாக செய்யப்பட்டு வருகிறது.

 

ஊத்துக்குளியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் மட்டுமே சாமி சிலைகள் செய்வதற்கு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர், திருமுருகன்பூண்டி – பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் மாதேஸ்வரன் கோவில் பின்புறம் ஸ்ரீ திருமகள் சிற்பக்கலைக் கூடத்தை நிறுவி நடத்தி வருபவர் வீரபத்திரன் மகன் சிவகுமார் (வயது 43). சிலைகள் செய்வதில் புகழ் பெற்ற சிற்பியான அவர் நான்காவது தலைமுறையாக கற்களில் சிற்பங்களை செதுக்கி வருகிறார்.

 

இவரது மனைவி பத்மபிரியா. மகள் இந்துமதி கல்லூரி மாணவி, மகன் ஸ்ரீ சபரிநாதன் பள்ளி மாணவர். இவரது சிற்பக் கூடத்தில் இருந்து 10 கைகளுடன் கொல்கத்தா காளி சிலை பல்வேறு பெரிய சிலைகள் செதுக்கி இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

தற்போது யாரும் செய்ய முன்வராத நிலையில் அவர் ஒரே கல்லில் 5 விநாயகர்கள் கொண்ட ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார் சிலைகள் செய்து சாதனை படைத்துள்ளார்.  இதுகுறித்து சிற்பி சிவகுமார் கூறியதாவது: இந்த ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார் சிலையை 8 மாதத்திற்கு முன்பு ஈரோடு, சூரம்பட்டி, பள்ளிவாசல் வீதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவில் நிர்வாகிகள் இச்சிலையை ஒரே கல்லில் செய்து தருமாறு கேட்டனர்.

இவர்கள் பல்வேறு கலை கூடத்திற்கு சென்று கேட்டுள்ளனர். ஒரே விநாயகர் என்றால் யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம். ஆனால் இவர்கள் வெவேறு விநாயகர் வேண்டும் என்று சொன்னதால் இச்சிலையை செய்ய யாரும் முன்வரவில்லை. பின்னர் என்னை தொடர்பு கொண்டு எனது சிற்பக் கூடத்துக்கு வந்தனர்.

 

எனக்கும் முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஈரோடு, தஞ்சாவூர், வெள்ளியங்கிரி மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்ட சிலைகள் 1 அடி சிலையாகவும், ஒரே மாதிரி விநாயகர் சிலை யாகத்தான் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. ஏனெனில் இந்த சிலையை செய்ய நின்று கொண்டு தான் செய்ய முடியும். மற்ற சிலைகள் போல் இதனை திருப்பியோ, குப்புற போட்டோ செய்ய முடியாது.

 

அவ்வளவு நுணுக்கம் இருப்பதால் நான் இதை சவாலாக ஏற்றுக்கொண்டு செய்துதர சம்மதித்தேன். இதற்காக நாங்கள் ஊத்துக்குளி, பெட்டிக்கடை பகுதியில் உள்ள ஆனந்தன் என்பவரின் கல்குவாரியில் 6 டன் எடை கொண்ட கல்லை தேர்வு செய்து லாரி மூலம் கொண்டு வந்தோம். இந்த வேலையை (சிவகுமார்) எனது மேற்பார்வையில், சிற்ப தொழிலாளர்கள் கருப்பன், பூதத்தால், பொம்மையன், கணேசன், அப்பு ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் காலையிலும், மாலையிலும் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்து 6 மாதங்களில் முடித்துள்ளோம்.

 

இந்த ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார்கள் சிலையானது பீடத்துடன் 4.25 அடி உயரமும், 4.25 அடி அகலமும்,1.750 கிலோ எடையும் கொண்டது. சிலையின் சிறப்பு அம்சமாக 5 விநாயகர்களை கொண்டது. முதல் விநாயகரானது அணைக்காமல் மடியில் உட்கார வைத்த சித்தி, புத்தி உடணமர் கல்யாண விநாயகர், 2வது கையில் ஆபரண கட்டுடன் உடனமர் லட்சுமியுடன் லட்சுமி கணபதி, 3 வது தும்பிக்கை வலது புறம் உள்ள நிலையில் வலம்புரி விநாயகர், 4வது தும்பிக்கை இடது புறம் உள்ள நிலையில் இடம்புரி விநாயகர் என நான்கு விநாயகர்களுக்கும் தலா 4 கைகள் உள்ளது.

 

5வது 2 கைகள் மட்டும் உள்ள இடது கையில் சிவனும், இடது கை தனது வயிற்றை அனைத்து நிலையில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிலையும் ஒரே கல்லில் செதுக்கபட்டுள்ளது. இந்த சிலையை வைக்க 1.25 அடியில் தனி பீடமும் செய்யப்பட்டுள்ளது.

 

இத்துடன் இந்த 5 விநாயகர் சிலைகளிலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதாவது 5 விநாயகர் சிலைகளிலும், விநாயகர்கள் கைகள் ஒன்றோடு ஒன்றாக எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த விநாயகர் கைகள் தனியாக தெரியும் அளவிற்கு நூதனமாக இணைக்கப் பட்டுள்ளது. மேலும் சிலைகள் தாமரை மேல் உள்ளது போலவும், சிலைகளின் தலை பகுதியில் தாமரை மொட்டுகள் சேர்ந்து அனைவருக்கும் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

விநாயகர் சிலைகளின் தலை பகுதியில் கிரீடமும், முகத்தின் நெற்றியில் விபூதி பட்டையும், கழுத்தில் நெக்லசும், காதில் அலங்கார வேலைப்பாடு மற்றும் காதுகளை ஒட்டி யானையை கட்டுப்படுத்தும் அங்குசம் மற்றும் ஆயுதமும், தும்பிக்கையின் மத்தியில் ஓம், சூலம், மற்றும் பூக்கள் உள்ள நிலையில் தும்பிக்கையின் நுனிப்பகுதியில் கலசம், லட்டு, கொழுக்கட்டை ஆகியவற்றை பிடித்த நிலையிலும், அதேபோல் தும்பிக்கையின் ஒரு பகுதியில் தந்தம் உடைந்தும் மற்றொரு பகுதியில் முழு தந்தமும், வயிற்று பகுதியில் நாகப்பாம்பை அர்னா கயிறு போல் கட்டியும், கைகள் அங்குசம் மற்றும் பாசக்கயிறோடு மக்களுக்கு ஆசிர்வதிக்கும் நிலையிலும், மேலும், விநாயகர்கள் கால்களிலும் அலங்காரம் செய்யப்பட்டு தொங்கப்பட்ட நிலையிலும், செதுக்கப்பட்ட சிலையின் முத்தாய்ப்பாக 5 விநாயகர் சிலைகளுக்கு நடுவில் விநாயகர் வாகனமான எலி எட்டிப்பார்க்கும் வகையில் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.

 

இத்துடன் பஞ்ச சிலைகள் செதுக்கும் போது சாஸ்திர, ஐதீகப்படி சிலைகளில் சூரியன் எனப்படும் வலது கண்ணை தங்க ஊசி மூலமும், சந்திரன் எனப்படும் இடது கண்ணை வெள்ளி ஊசி மூலமும் கீறி கண்கள் செதுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சமாகும்.

 

இந்த சிலையானது கோவில் நிர்வாகிகளான தலைவர் முருகேசன், செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் கோபாலன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நாளை (20 ந் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, பாதுகாப்பாக கிரேன் மூலம் டாரஸ் லாரியில் ஏற்றப்பட்டு ஈரோடு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் மாலை 4 மணி வரை ஈரோட்டின் முக்கிய வீதிகளில் இந்த ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார் சிலையை வலம் வந்து அந்த புதிய கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்வாறு சிற்பி சிவகுமார் கூறினார்.

Right Menu Icon