--- --:--:-- --

“ஊருக்கு நடுவில் கழிவுநீர்! ஊராட்சியை சுற்றிலும் குப்பை!!” பாடாய் படுத்தும் பாம்பன் ஊராட்சி ..பரிதாப நிலையில் மக்கள்..!!

xfgsd

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் ஊராட்சி, வலையில் சிக்கிய மீன்போல பல்வேறு பிரச்சனைகளால் துடித்துக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி நிர்வாக மக்கள் பிரதிநிதிகள் இருந்த போதும்கூட, சாலை வசதி, சுகாதாரம், குப்பை மேலாண்மை என்று பல்வேறு பிரச்சனைகளால் பாம்பன் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர். 

 

இராமநாதபுரம் மாவட்ட கடலோரத்தில் உள்ள எழில் மிகுந்த ஊராட்சிதான் பாம்பன்; இந்தியாவில் மிகப் பெரிய பாலமான 2.2 கி.மீ.நீளமுள்ள அன்னை இந்திரா பாலமே, இந்த ஊருக்கு உலகளவில் அடையாளத்தை தந்துள்ளது; கடலில் அமைந்துள்ள இப்பாலம், ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்பகுதியுடன் இணைக்கிறது.

 

பாம்பன் ஊராட்சியில், மீன்பிடித் தொழில் மிக முக்கியமான தொழில் ஆகும். ராமேஸ்வரத்திற்கு இணையாக இங்கு மீன்பிடி படகுகள் உள்ளன. பள்ளி, மருத்துவமனை, ரயில் நிலையம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. பாம்பன் தீவு சிறப்பான சாலை மற்றும் இரயில் போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது. இங்கு இந்தியாவின் பெரிய பாம்பன் கடல் வாழ் உயிரினங்களின் காட்சியகம் அமைந்துள்ளது.

 

அழகு இருக்குமிடத்தில் ஆபத்துகளும் இருப்பதை போல், கடலோரம் இருக்கும் ரம்மியமான பாம்பன் ஊராட்சியில் தான், சட்டவிரோதமாக பொருட்களை கடத்துவது, சட்டவிரோதமாக தப்பிச் செல்லுதல் போன்றவையும் நடைபெற்று, செய்திகளில் அடிக்கடி பாம்பன் பெயர் இடம் பெயரக் காரணமாகிறது.

சிறப்புகளையும், சறுக்கல்களையும் கொண்ட பாம்பன் ஊராட்சியில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை; அதற்கெல்லாம் உரிய தீர்வுகளும் இல்லை என்று பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். பாம்பன் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் பி.அகிலா பேட்ரிக்; இவரது கணவர் பேட்ரிக் மதிமுகவின் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ளார்.

 

மதிமுக பிரமுகரின் மனைவி என்பதால், கிராமத்திற்கு ஏதேனும் செய்வார் என்ற நம்பிக்கையில், அவரை பொதுமக்கள் தேர்ந்தெடுத்தனர்; ஆனால், அந்த நம்பிக்கை எல்லாம் வீணாகிவிட்டதே என்று, இன்று புலம்புகின்றனர். பாம்பன் ஊராட்சியில் எந்தவித பணியும் முறையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கிராம மக்கள் முன்வைக்கின்றனர். நமது “குற்றம்குற்றமே” வார இதழ் நிருபர் குழு, பாம்பன் கிராத்தில் பலரை சந்தித்தது. அப்போது அவர்கள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று தலைவரின் நேரடி நிர்வாகத்திற்கு கீழ் வந்ததும், பாம்பன் ஊராட்சிக்கு விடிவு பிறந்துவிட்டது என்று நினைத்தோம். ஆனால், அப்படி எந்த அதிசயமும் இங்கு நடக்கவில்லை.

பாம்பன் ஊராட்சி சுகாதார சீர்கேடுகளின் தலைநகரம் என்று உதாரணம் கூறும் அளவுக்கு இந்த ஊரில் எங்கு பார்த்தாலும் குப்பையும் கூளங்களும் காணப்படுகிறது. முறையாக துப்புரவுப்பணி நடக்காததால் வீதிக்கு வீதி குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.

 

கழிவு மற்றும் குப்பை அள்ளும்பணி முறையாக நடக்கவில்லை என்பதற்கு ஆங்காங்கே காணப்படும் குப்பை மலைகளே சாட்சி. இந்த குப்பை மேடுகளை பார்த்தபடி தான் ஊராட்சி தலைவரும், வார்டு உறுப்பினர்களும் சென்று வருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்ற மனசாட்சி அவர்களுக்கு துளியும் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

 

குப்பைக் கழிவுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் உட்கொள்வது பெரும் ஆபத்தாக உள்ளது. ஒருசிலர் குப்யை தீ வைத்து எரிக்கின்றனர்; இதில் இருந்து வெளிப்படும் புகையால் குழந்தைகள், வயதானவர்களுக்கு மூச்சுத்திணறல் வருகிறது. பலருக்கு கண் எரிச்சல் உண்டாகிறது.

தண்ணீர், சாலை வசதிகளும் இங்கு முறையாக செய்யப்படுவதில்லை. குண்டும் குழியுமான ரோடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆங்காங்கே இருக்கும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி, குட்டை போல் காட்சியளிக்கிறது; இவை கொசுக்களின் உற்பத்தி மையம் போல் மாறிவிட்டன. இதனால், மழைக்காலமான தற்போது டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

 

தேங்கிய மழைநீரை அகற்றவோ அல்லது பள்ளத்தை சரி செய்யவோ நடவடிக்கை எடுக்காமல், ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. டெங்குவோ, காலரா போன்ற பாதிப்பு ஏற்பட்டால்தான், ஊராட்சி நிர்வாகத்தின் தூக்கம் கலையும் போல் தெரிகிறது.

 

பாம்பன் ஊராட்சியில் தண்ணீர் வினியோகத்திலும் குளறுபடி இருக்கிறது. சில தெருங்களில் குழாய் அமைக்கப்படவில்லை அல்லது பழுதானவற்றை சரிசெய்யாமல் போட்டு வைத்துள்ளனர். பழுதடைந்த தெருவிளக்குகள் சரி செய்வதில் மெத்தனமாக இருப்பதால் இரவில் அப்பகுதி இருட்டில் மூழ்கிக்கிடக்கிறது.

சுகாதாரம், சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதிகள் என ஊராட்சி செய்து தரவேண்டிய பணிகள் நிறைய இருந்தும் அதில் துரும்பளவுக்கு கூட செய்துதர, ஊராட்சி தலைவி அகிலா முன்வரவில்லை. வார்டு உறுப்பினர்களும் இதையெல்லாம் செய்து தராமல், எந்த திட்டத்தில் எந்த தொகையை சுருட்டலாம் என்ற எண்ணத்துடன் வலம் வருகின்றார்கள். இதே நிலைமை நீடித்தால் பொதுமக்களாகிய நாங்கள் சும்மா இருக்கப் போவதில்லை. அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக் கோரி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

 

பொதுமக்களின் புகாரில் நியாயம் இருப்பதை, ஊராட்சி தெருக்களை நாங்கள் வலம் வந்தபோது உணர்ந்தோம். ஊராட்சி நிர்வாகம் இனியும் மந்தகதியில் செயல்படுவதை விடுத்து, மக்களின் தேவைகளை செய்து தர வேண்டும். இதே போக்கு தொடர்ந்தால், வரும் சட்டமன்றத் தேர்தல் வாயிலாக மக்கள் பதிலடி தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Right Menu Icon