நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷனை குற்றவாளி என அறிவித்தது உச்ச நீதிமன்றம்..! ஆகஸ்ட் 20-ந் தேதி தீர்ப்பு!!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், நீதிமன்றத்தையும் விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை குறித்து வரும் ஆகஸ்ட் 20-ந் தேதி வாதத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
இந்தியாவில் பிரபலமான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் பிரசாந்த் பூஷன் .உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி பிரபலமானவர். இவர் கடந்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறித்தும், நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்தும் டுவிட்டரில் அடுத்தடுத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து விசாரித்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பிரசாந்த் பூஷன் பதில் மனு தாக்கல் செய்த நிலையில் கடந்த 5-ந் தேதி விசாரணை முடிவடைந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
6 மாதம் சிறை?
மேலும் பிரசாந்த் பூஷனுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த வாதம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு 6 மாதம் சிறை அல்லது அபராத மோ அல்லது இரண்டுமே தண்டனையாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.நாட்டின் மூத்த வழக்கறிஞர் ஒருவரை, நாட்டின் உச்ச நீதிமன்றமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






