சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறையா?
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு தண்டனையை அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு அபராதமும் விதித்தது.
தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 2017 பிப்ரவரி மாதத்திலிருந்து சிறையில் இருக்கும் இந்த மூவரும் இதுவரை அபராத தொகையை செலுத்தவில்லை என்று சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சசிகலா அபராதம் செலுத்தாத நிலையில் அவர் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.






