கைலாசா நாட்டிலேயே தனி வங்கி துவங்கியிருப்பதாக கூறும் சாமியார் நித்தியானந்தா..!
தொடர்ச்சியான பாலியல் புகார்கள் காரணமாக சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா உலகளாவிய வங்கி ஒன்றை தொடங்கப் போவதாக பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈக்குவடார் நாட்டின் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என்று பெயரிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சாமியார் நித்யானந்தா.
தனிநாடு குறித்து யூ டியூப் வழியாக நேற்று பல்வேறு பரபரப்பு அறிவிப்புகளை சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அதன்படி தாம் வாழ்ந்து வரும் கைலாசா தீவுக்கு என்று வாட்டிகன் வங்கியை மாதிரியாக வைத்து ரிசர்வ் வங்கி பேங்க் ஆப் கைலாசா என்ற பெயரில் வங்கி ஒன்றில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
பெருமளவில் நன்கொடை வந்துள்ளதால் அதை நல்ல வழியில் பயன்படுத்த போவதாக அவர் கூறியுள்ளார். கைலாசா நாட்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு வர்த்தகத்திற்கு தனித்தனியாக கரன்சிகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் நித்யானந்தா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்புகளை எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியிட போவதாக நித்யானந்தா கூறியுள்ளார். கைலாச நாட்டுக்கு என 300 பக்க பொருளாதாரக் கொள்கைகள் தயாராக இருப்பதாக சர்ச்சை சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்துள்ள சாமியார் நித்தியானந்தா தொடர்ச்சியான பாலியல் புகாரில் சிக்கினார். கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்.
அவரை பிடிக்க பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவை பிறப்பித்தது. அவரை கைது செய்ய சர்வதேச போலீசான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு தேடி வருவது குறிப்பிடத்தக்கது.







