சில்லறை தகராறு.. நடத்துனரை அடித்த கும்பல்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சிதம்பரத்தில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த தனியார் பேருந்தில் சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார்.
அப்போது அவருக்கும் பேருந்து நடத்துனர் மோகன் என்பவருக்கும் சில்லறை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டது. அதனால் பேருந்தில் பயணம் செய்த ராஜ் தனது குடும்பத்தினருடன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக பேருந்து கும்பகோணம் சென்று விட்டு மீண்டும் சீர்காழி அருகே வந்துள்ளது. அப்போது ராஜ் அவரது ஆதரவாளர்களுடன் சேர்த்து அருகே மண்ணிபாளையம் என்ற இடத்தில் இருசக்கர வாகனங்களுடன் பேருந்து முன் புறம் நின்று வழிமறித்து பேருந்தில் ஏறி உள்ளார்.
அதோடு நடத்துனர் மோகனை பேருந்து உள்ளேயே வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவருக்கு ஆத்திரம் அடங்காத நிலையில் அவரும் அவருடன் வந்த கும்பலும் நடத்துனர் மோகனை கீழே இழுத்து இறக்கி சாலையில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
அதனால் காயமடைந்த நடத்துனர் மோகன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பேருந்து நிர்வாகம் சார்பில் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க தற்போது பத்துக்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்து நடத்தினரை சேர்ந்து தாக்கும் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதுவரை காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




