தெலங்கானா முதல்வரின் ரிமோட் கன்ட்ரோல் பிரதமரிடம் உள்ளது..!
தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை நேற்று தொடங்கியுள்ளார். தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
கடந்த 9 ஆண்டுகாலமாக முதலமைச்சர் கேசிஆர் ஆட்சி செய்து வரும் நிலையில், மாநில அரசு மீதான அதிருப்தியை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நேற்று அங்குள்ள கம்மம் பகுதியில் ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி ஆளும் கேசிஆர் அரசை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது, ஆளும் முதலமைச்சர் கேசிஆரின் ரிமோட் கன்டரோல் பிரதமர் மோடியிடம் உள்ளது. பாஜகவின் பி டீம் தான் பிஆர்எஸ் கட்சி. சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சிகாரர்கள் தங்கள் மீதான ஊழல் புகார்களுக்கு அஞ்சி பாஜகவுக்கு துணையாக செயல்பட்டு வருகிறார்கள்.
கேசிஆர் தன்னை ராஜாவாக நினைத்து செயல்படுகிறார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கேசிஆர் கட்சி கலந்து கொண்டால் காங்கிரஸ் பங்கேற்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தோம். காங்கிரஸ் கட்சியால் அவர்களுடன் கைக்கோர்க்க முடியாது. கர்நாடகாவில் ஊழல் பாஜக அரசை தோற்கடித்தது போலவே தெலங்கானாவிலும் ஊழல் பிஆர்எஸ் அரசை காங்கிரஸ் தோற்கடிக்கும்.
காங்கிரஸ் கட்சின் தொண்டர்கள் சிங்கம் போன்றவர்கள். அவர்கள்தான் கட்சியின் முதுகெலும்பு. உங்கள் துணையுடன் தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்த முடியும். பாரத் ஜோடோ யாத்திரைக்கு தெலங்கானா மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்தார். கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உற்சாகத்தில் தெலங்கானா தேர்தல் மீது ராகுல் காந்தி முன்கூட்டியே கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.





